Published : 02 Apr 2020 01:14 PM
Last Updated : 02 Apr 2020 01:14 PM

கரோனா தடுப்பு; நம்மை நாம் வெல்வதே மிகப்பெரிய வெற்றி: மக்களுக்கு தலைமை நீதிபதி சாஹி அறிவுரை

சமூகத்திலிருந்து விலகி இருப்பதில் நாம் எதையும் இழக்கப்போவதில்லை, இந்தக் கட்டத்தில் நம்மை நாம் வெல்வதுதான் பெரிய வெற்றி என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சாஹி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரைத் தவிர மற்ற அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.

தற்போது இந்த கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் வேளையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சாஹி மக்களுக்கு அறிவுரையாக நீண்ட கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தக் கடித்ததின் சுருக்கம் பின்வருமாறு:

"கரோனா மறைந்து நின்று நம்மைச் சுற்றி வளைத்துள்ளது. சர்வதேச அளவில் அது ஏற்படுத்தியிருக்கும் அழிவில் நாமும் நடுவில் சிக்கியுள்ளோம். நிறைய வளர்ந்த நாடுகள் சூழலை குறைவாக எடை போட்டதாலும், மெத்தனத்தாலும், இதைக் கையாள வளங்கள் சரியாக இல்லாமல் போனதாலும் தற்போது அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த எதிர்பாராத பாதிப்பின் அளவு பன்மடங்கு பெரியது. மனிதர்கள் இந்தத் தொற்றின் ஆபத்தான பரிமாணங்களைப் புரிந்துகொள்ள, மனிதர்களுக்குத் திறன் இல்லாமல் போனதுதான் காரணம். யாரும் தயார் நிலையில் இல்லாத போது இது நிகழ்ந்துள்ளது. இந்த விரும்பத்தகாத தொற்று பரவ, நடமாட்டமும், தொடர்பும்தான் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

'கண்ணுக்குத் தெரியாமல் எதிரி மறைந்திருந்தால், நாமும் மறைவில் இருப்பதே விவேகமானது' என்று நெடுங்காலம் முன்னரே சாணக்யா கூறியிருக்கிறார். இது ரகசியம் காத்தல், யாருக்கும் தெரியாமல் நகர்வது போன்றவற்றுக்கான ஆலோசனை அல்ல. மாறாக, நம்மை கையாலாகாத நிலைக்கு ஆளாக்கியிருக்கும், நாம் எதிர்கொண்டிருக்கும் இந்தப் பேரழிவின் இயல்பைப் புரிந்துகொள்வதற்கான ஆலோசனை. எனவே நம்மை நாமே கட்டுப்படுத்தி நமக்கு ஒரு லக்ஷ்மண ரேகையை போட்டுக்கொள்வதே புத்திசாலித்தனம்.

நமது எதிரியான கரோனாவுக்கு நமக்கே தெரியாமல் நம் நகர்வு மூலமாக வலு சேர்க்கலாம், அதனால் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். நாம் உயிர்வாழவும், பேரழிவு வராமல் தற்காத்துக்கொள்ளவும், அடைக்கலம் புகுவது, பாதுகாத்துக் கொள்வது போன்ற நடவடிக்கைகள் உதவும். நமது எதிரியை வெல்ல துணை நிற்கும்.

சமூகத்திலிருந்து விலகி இருப்பதில் நாம் எதையும் இழக்கப்போவதில்லை. இது விலகியிருத்தலே தவிர தனிமைச் சிறை அல்ல. பாதுகாப்பாக இருந்து, தனிச் சூழல், புரிதல், மனநிறைவு ஆகியவற்றை பயிற்சி செய்ய இது நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு.

நமது வேலையில் நாம் காட்டும், நம் குடிமக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஈடுபாடு, நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதிக்கும் போதும் தேவைப்படுகிறது. அனைத்து தரப்பிலிருந்தும் ஒத்துழைப்பு இருப்பதினால் நாம் வெற்றிகரமாக கரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தை ஆரம்பித்துவிட்டோம். ஆனால் கடினமான காலகட்டம் இன்னமும் இருக்கிறது.

நிலையான விழிப்புணர்வு கண்டிப்பாக இந்த நிச்சயமற்ற நிலையைக் கடக்க நமக்கு உதவும். 'எந்த வெற்றியும் நிரந்தரம் அல்ல, எந்தத் தோல்வியும் இறுதியல்ல, தொடர வேண்டும் என்ற துணிச்சலே முக்கியம்' என்ற வின்ஸ்டன் சர்ச்சிலின் வார்த்தைகளை நினைவுகொள்ளுங்கள்.

நாம் எப்படி இந்த தற்காப்பை விடாப்பிடியாக ஆரம்பித்தோமே அதையே முழு தீர்மானத்துடன் தொடர வேண்டும். இது, நாம் ஏற ஏற நீண்டு கொண்டிருக்கும் மலைப் பாதை போல தெரிந்தாலும் முயற்சியில் சோர்ந்துவிடக்கூடாது.

அதிக பொறுமையையும், எந்த சூழலுக்கும் ஏற்றவாரு மாற்றிக்கொள்ளும் திறனும் பெறும்போது ஏமாற்றங்களையும், பாதிப்புகளையும் வெற்றி கொள்ளலாம். இந்த வலி, துறவு முழுக்க முழுக்க நமது நன்மைக்கு தான். வழி தவறிவிட வேண்டாம். இன்னமும் இதற்கான சிகிச்சை விஞ்ஞானிகளின் கைக்கு எட்டவில்லை. ஆனாலும் அயராத அவர்களின் உழைப்பும், மற்ற பல்வேறு துறையினரின் முயர்சியும் இந்தப் பிரச்சினையைத் தடுக்கும். இங்கு, நாம் நம்மை வெல்வதை விட மிகப்பெரிய வெற்றி இருக்க முடியாது"

இவ்வாறு தலைமை நீதிபதி சாஹி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x