Published : 02 Apr 2020 11:46 AM
Last Updated : 02 Apr 2020 11:46 AM
பொதுமக்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.1000 மற்றும் அரிசி உள்ளிட்ட இலவச அத்தியாவசியப் பொருட்கள் அங்காடிகள் மூலம் வழங்கும் பணி திட்டமிட்டபடி இன்று காலை தொடங்கியது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவுதல் காரணமாக 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.1000 மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இன்று முதல் பத்து நாட்களுக்கு தினமும் தலா 100 அரிசி அட்டைதாரர்களுக்கு இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தினமும் நூறு குடும்ப அட்டைதாரர்கள் வீதம் அந்தந்த அங்காடிகள் மூலமாக முன்கூட்டியே டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது.
டோக்கன் பெற்றவர்கள் இன்று காலை 9 மணியில் இருந்து அங்காடி கடைகளுக்கு வரத் தொடங்கினர். அங்காடிகளில் வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்கும் வகையில் சமூக இடைவெளி விட்டுக் கட்டம் போடப்பட்டிருந்தது. பொதுமக்கள் அதில் வரிசையாக நின்று தங்கள் முறை வரும்போது நிவாரணப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
வேலையின்றி முடங்கிக் கிடக்கும் தங்களுக்கு இந்த நிவாரணம் பேருதவியாக இருக்கும் என்று மக்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT