Published : 02 Apr 2020 10:52 AM
Last Updated : 02 Apr 2020 10:52 AM

டெல்லி மாநாடு: அரசியல் சாயம் பூச வேண்டாம்; வாசன் வேண்டுகோள்

வாசன்: கோப்புப்படம்

சென்னை

டெல்லி மாநாட்டுக்குச் சென்றவர்களில் பலர் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்டிருக்கிறார்கள் எனவும், எனவே இதில் அரசியல் சாயம் பூச வேண்டாம் எனவும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப்.2) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவிலும் கரோனா வைரஸ் நோயானது நாளுக்கு நாள் பரவி வருகின்ற வேளையில் அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதாவது, யாருக்காவது கரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் அவர் மூலம் மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்புண்டு. இந்நிலையில், டெல்லியில் நடந்த ஜமாத் மாநாட்டுக்குச் சென்றவர்களுக்கு கரோனா அறிகுறி இருப்பதாக செய்திகள் தெரிவித்தன. இந்த சூழலில் மாநாட்டுக்குச் சென்றவர்களில் பலர் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்டிருக்கிறார்கள். எனவே இதில் அரசியல் சாயம் பூச வேண்டாம்.

அம்மாநாட்டில் பங்கேற்ற பலர் இன்னும் மருத்துவப் பரிசோதனை செய்யவில்லை என்ற தகவலும் வருகிறது. எனவே, டெல்லியில் நடைபெற்ற மாநாட்டுக்குச் சென்றவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.

அப்படி பரிசோதனை செய்தால்தான் அவர்களுக்கு கரோனா அறிகுறி இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும். அறிகுறி இருக்குமாயின் அவர்களை மருத்துவக் கண்காணிப்பில் வைத்து குணமாக்க முடியும். அது மட்டுமல்ல அவர்கள் வெளியில் நடமாடினாலோ அல்லது மற்றவர்களிடம் சாதாரணமாக பழகினாலோ இந்நோய் பரவ வாய்ப்புண்டு.

இன்றைக்கு ஒட்டுமொத்த மனித குலம் கரோனா ஒழிப்புக்காக விழிப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கு எவரும் விதிவிலக்கல்ல. எனவே, மாநாட்டுக்குச் சென்றவர்களில் பலர் நமக்கு கரோனா இருக்காது என்று நினைத்திருக்கலாம் அல்லது விழிப்புணர்வு இல்லாமலும் இருக்கலாம்.

இருப்பினும் கரோனா என்ற கொடிய நோயிலிருந்து இந்திய மக்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாக இருப்பதாலும், அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுப்பதாலும் மாநாட்டுக்குச் சென்ற அனைவரையும் அரசு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

எனவே, டெல்லி மாநாட்டுக்குச் சென்றவர்களில் இன்னும் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளாதவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கரோனா பரவலைத் தடுக்க, கரோனாவை ஒழிக்க இந்தியாவில் உள்ள அனைவரும் முழு மூச்சாக ச்செயல்பட்டு, நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முன்வர வேண்டும்" என வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x