Last Updated : 04 Aug, 2015 03:33 PM

 

Published : 04 Aug 2015 03:33 PM
Last Updated : 04 Aug 2015 03:33 PM

தொடரும் மதுக்கடைகள் மீதான தாக்குதல்: உயிருக்கும், டாஸ்மாக் உடைமைக்கும் யார் பொறுப்பு?

‘மதுவிலக்கை வலியுறுத்தி மதுக்கடைகளை அடித்து நொறுக்கும் சம்பவங்கள் நடத்து வருகின்றன. இந்நிலையில் மதுபான பாட்டில்கள் சேதமடைந்தால், அதற்கு எங்களையே பொறுப்பாக மாற்ற வாய்ப்புள்ளது. எனவே எங்கள் உயிருக்கும், மதுக்கடை உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்த உள்ளனர்.

மதுக்கடைகள் மீது தாக்குதல் நடத்தப்படும்போது, அங்கு பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் தெற்கு, வடக்கு என வால்பாறையிலிருந்து மேட்டுப்பாளையம் வரை 311 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அதில் மேற்பார்வையாளர், விற்பனையாளர், விற்பனை உதவியாளர் என 1500 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மதுவிலக்கு கோரிக்கையை முன்வைத்து இதுவரை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம், முற்றுகை உள்ளிட்டவை இந்த ஊழியர்களை பெரிய அளவில் பாதிக்கவில்லை. ஆனால், கடைகளை அடித்து நொறுக்கும் சம்பவங்கள் இந்த ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு இல்லை

மதுக்கடை ஊழியர் ஒருவர் கூறும்போது, ‘கடையைத் தாக்க முன்வரும் போது, பொறுப்பில் உள்ள ஊழியர் நிச்சயம் அதைத் தடுப்பார். அப்படி தடுக்கும்போது, போராட்டக் காரர்கள் எங்களையும் எதிராளியாகத்தான் பார்ப்பார்கள். இதில் எங்கள் உயிருக்கு என்ன பாதுகாப்பு உத்தரவாதம் கொடுக்க முடியும்? குடிமகன்களின் பிரச்சினை ஒருபுறம், போராட்டக்காரர்களின் பிரச்சினை மறுபுறம் என கடையை திறந்து மூடும் வரை, உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவுகிறது. நாங்கள் அரசாங்க வேலையில்தான் இருக்கிறோமா என்பதே சந்தேகமாக உள்ளது’ என்றார்.

அச்சம்

வழக்கமாக, கடைகளில் மது பாட்டில்கள் ஏற்றி இறக்கும்போது ஏற்படும் சேதங்கள், திருட்டுச் சம்பவங்களில் ஏற்படும் இழப்பு அனைத்துமே மதுக்கடை ஊழியர்கள் மீதே சுமத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடைகளை அடித்து நொறுக்கி, பெரும் சேதம் ஏற்பட்டால், அந்த இழப்பு யாருடைய பொறுப்பு என எந்த தெளிவான அறிவிப்பும் டாஸ்மாக் நிர்வாகத்திலிருந்து வரவில்லை. இதனால் மொத்த இழப்பும் தங்கள் தலையில் கட்டப்பட்டுவிடுமோ என்ற அச்சமும் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.ஜான் அந்தோணி கூறும்போது, ‘மதுபாட்டிலுக்கு கடையில் எந்த சேதம் ஏற்பட்டாலும் அதை ஊழியரே ஈடுகட்ட வேண்டும் என்பதே கடந்த கால வரலாறு. 10 வருடங்களில் இல்லாத வகையில் தற்போது கடைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. இதில் எங்களின் உயிருக்கு என்ன உத்தரவாதம் உள்ளது? அதேபோல சேதத்துக்கு யார் பொறுப்பேற்பது? உள்ளிட்ட கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும். எங்களது அச்சுறுத்தல் நியாயமானது. அதை கோவை மாவட்ட ஆட்சியர், முதுநிலை மண்டல மேலாளர், நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு மனுவாக தெரிவித்துள்ளோம். கூடவே, மாவட்டத்தில் அச்சுறுத்தல், அதிக போராட்டங்கள் நடைபெற்ற பகுதிகளை பட்டியலிட்டுக் கொடுத்து, பாதுகாப்பு வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x