Published : 01 Apr 2020 06:39 PM
Last Updated : 01 Apr 2020 06:39 PM
கரோனா ஊரடங்கு பின்னணியில், ஒருபுறம் கள்ளச் சந்தையில் மதுபான விற்பனை ஜோராக நடந்து கொண்டிருக்க, மறுபுறம் டாஸ்மாக் மதுக் கடைகளைக் கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன.
இதைத் தடுக்க, கோவை மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளை இறுகப் பூட்டி, கூடவே கதவுகளின் ஷட்டருக்கு வெல்டிங் வைக்கும் வேலைகளிலும் இறங்கியுள்ளனர் கடை ஊழியர்கள்.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 310 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. கோவை வடக்கு பிரிவுக்காகப் பீளமேடு பகுதியில் சரக்கு குடோனும், கோவை தெற்கு பிரிவுக்கு பொள்ளாச்சி சங்கம்பாளையத்தில் ஒரு சரக்கு குடோனும் உள்ளன. மதுக்கடை சிப்பந்திகள் அங்கிருந்து தங்களது கடைத் தேவைக்கேற்றபடி சரக்குகளை ரசீது போட்டு வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளில், கையிருப்பில் இருந்த சரக்குகளோடு கடைகளைப் பூட்டிவிட்டு வந்துவிட்டனர் சிப்பந்திகள். இதையடுத்து, கடைகளில் உள்ள மீதி சரக்குகளுக்குக் கடைச் சிப்பந்திகளே பொறுப்பு என டாஸ்மாக் நிர்வாகம் சொல்லிவிட்டது.
இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து, மதுபாட்டில்களைத் திருடிச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் சில ‘குடிமகன்’கள். கடந்த இரண்டு நாட்கள் முன்பு கோவை புறநகரான அன்னூர் பகுதியில் ஒரு கடையிலும், கோவை மாநகர் சிங்கநல்லூர் வெள்ளலூர் சாலையில் ஒரு கடையிலும், பூட்டுகளை உடைத்து, மதுபாட்டில்களை சிலர் திருடிச் சென்றுவிட்டனர்.
இதில் சிங்காநல்லூர் கடையில் இருந்த சரக்குகளின் மதிப்பு மட்டும் ரூ.1.5 லட்சம். இதுகுறித்து காவல் துறை வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வரும் நிலையில், கடைகளில் எஞ்சியிருக்கும் சரக்குகளுக்கு அக்கடை ஊழியரான சூப்பர்வைசர்தான் முழுப் பொறுப்பு என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துவிட்டது. இதனால் அதிருப்தியுற்ற ஊழியர்கள், “திடீரென்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், இருந்த சரக்குகளைக் கடைக்குள் வைத்துப் பூட்டுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. அவற்றை எங்கள் பொறுப்பில் இனியும் வைத்துக்கொள்ள முடியாது. எனவே, சரக்குகளை எடுத்துத் திரும்ப மைய குடோனிலேயே நிர்வாகம் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்கு இசையாத டாஸ்மாக் நிர்வாகம், ‘எந்தந்த கடைகளுக்குப் பாதுகாப்பில்லையோ, அந்தந்த கடைகளில் சம்பந்தப்பட்ட கடை சூப்பர்வைசர்கள் இரவில் தங்கிப் பாதுகாக்க வேண்டும்’ என வாய்மொழி உத்தரவிட்டது. இதனால் மேலும் அதிருப்தியடைந்த ஊழியர்கள், “திருட வருபவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். தேவைப்பட்டால் கொலைகூடச் செய்வார்கள். அப்படி ஒரு சூழலில் எங்களால் என்ன செய்ய முடியும்?” என்று போர்க்கொடி தூக்கினர்.
இது தொடர்பாக, முதல்வர் முதற்கொண்டு உள்ளூர்ப் பொது மேலாளர் வரை பலருக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர். இதையடுத்து, ‘பாதுகாப்பற்றவை என்று கடை சிப்பந்திகள் கருதும் கடைகள் குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்தலாம். அந்தக் கடைகளின் அருகிலேயே ஒரு திருமண மண்டபத்தையோ, சமூகக்கூடத்தையோ வாடகைக்குப் பிடித்து சரக்குகளை அங்கு பாதுகாப்பாக வைத்து, ஊரடங்கு உத்தரவு நீக்கம் செய்யப்பட்ட பின்பு திரும்ப எடுத்துக்கொள்ளலாம்’ என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
அந்த வகையில், பாதுகாப்பற்ற கடைகளாக, கோவை தெற்கில் 24 கடைகளையும், கோவை வடக்கில் 21 கடைகளையும் சிப்பந்திகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கிடையே இன்னொரு சிக்கலும் எழுந்தது. ‘இந்தச் சரக்குகளை குடோனிலிருந்து எடுத்துவந்து கடைகளுக்குப் போடுவதற்குத்தான் ஏற்கெனவே குறிப்பிட்ட லாரிக்காரர்களுக்கு டெண்டர் விட்டிருக்கிறார்கள். அவர்களே திரும்ப வந்து கடையிலுள்ள சரக்குகளை எடுத்துச் சென்று குறிப்பிட்ட குடோன்களில் அடுக்கி பத்திரப்படுத்துவது சாத்தியமில்லை. எனவே, இப்போது ஏற்றப்பட்டு குடோனுக்குக் கொண்டுசெல்லப்படும் சரக்கிற்குக் கடை சிப்பந்திகளே வாடகை தர வேண்டும்’ என்று நிர்வாகம் சொல்லியிருக்கிறது.
அதற்குப் பதிலடியாகச் சிப்பந்திகளும், “அது எங்களால் முடியாது. ஏற்கெனவே எங்கள் சொந்தப் பணத்தைப் போட்டுத்தான் பல செலவுகளைச் செய்து வருகிறோம். தவிர, இப்போது டாஸ்மாக் மது அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் வருவதில்லை. நாங்களாக ஒரு வேனைப் பிடித்து சரக்குகளை ஏற்றிச் சென்றாலும், போலீஸாருக்குப் பதில் சொல்ல முடியாது. எனவே, இதற்கு நிர்வாகம்தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று சொல்லிவிட்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்து, கடைசியாக இதற்குத் தானே பொறுப்பெடுத்திருக்கிறது டாஸ்மாக் நிர்வாகம். ஏற்கெனவே மதுபானங்களை ஏற்றிச் செல்லும் லாரிக்காரர்களிடம் பேசி, அதற்கான வாடகையைத் தனியே தருவதாகச் சொல்லி அவர்களையே இப்பணிக்கும் பணித்திருக்கிறார்கள்.
பிரச்சினை அத்துடன் முடிந்துவிடவில்லை. சரக்கு ஏற்றிச்செல்ல வந்த லாரிக்காரர்கள், ஏற்கெனவே பேசியதற்கு மாறாக, ஒரு லாரிக்கு ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை சிப்பந்திகளிடமே பேரம் பேச ஆரம்பிக்க… இருக்கும் பிரச்சினைக்கு இடையில் கடைகளில் இருக்கும் சரக்கு திருடு போய்விட்டால் என்ன செய்வது என்று பயந்த சில கடை சிப்பந்திகள் வேறொரு வேலையில் இறங்கிவிட்டனர்.
பூட்டி வைத்திருந்தால்தானே உடைப்பார்கள்? கதவோடும், நிலையோடும் ஷட்டரை ஒரு பட்டா போட்டு வெல்டிங் வைத்துவிட்டால் என்ன செய்ய முடியும்... கதவையும், நிலையையும், ஷட்டரையும் சுவரோடு பெயர்த்து எடுத்துக்கொண்டுதானே உள்ளே நுழைய முடியும்? என்று யோசித்து, தங்கள் கடை கதவுகளுக்கு வெல்டிங் வைக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி பல மதுக் கடை கதவுகள் இரும்பு வெல்டிங் வைக்கப்பட்டுக் காட்சியளிக்கின்றன.
இப்படி வெல்டிங் வைத்த ஒரு கடை சூப்பர்வைசர் நம்மிடம் பேசும்போது, “அதிகாரிகள் எங்களுக்குச் சரியாக ஒத்துழைப்பதே இல்லை. செலவு என்று வந்தால் எங்கள் தலையிலேயே கட்டப்பார்க்கிறார்கள். மண்டபங்களிலோ, சமூகக்கூடத்திலோ வைத்திருந்தால் மட்டும் சரக்குகள் பத்திரமாக இருக்கும் என என்ன நிச்சயம்? சரக்குகளை அங்கே அடுக்கிவிட்டு, போலீஸ்காரர்களைத்தான் காவல் போடப் போகிறார்களாம்? அங்குள்ளவர்கள் ஆளுக்கு நாலு பாட்டில் எடுத்துவிட்டால் யார் பொறுப்பு? அதற்கு இது தேவலாம் என்றுதான் வெல்டிங் வைக்க ஆரம்பித்துவிட்டோம்” என்றார்.
இன்னொரு விஷயத்தையும் சொன்ன அவர், “டாஸ்மாக் சரக்குகளை போலீஸிற்குத் தெரியாமல் சுலபமாக யாரும் திருடி விட முடியாது சார். உதாரணத்திற்கு எங்கள் கடையையே எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் போலீஸ் லிமிட்டில் இதுபோல 5 டாஸ்மாக் மதுக் கடைகள் இருக்கின்றன. அதில் எல்லாம் பார்களும் உண்டு. அவர்கள்தான் எங்கள் கடை பூட்டப்பட்டிருக்கும் நேரத்தில் எங்களிடமே சரக்கை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பவர்கள். அப்படி விற்பவர்கள் இந்த போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டிற்கு மட்டும் மாதம் ரூ.30 ஆயிரம் மாமூல் தருகிறார்கள். அந்த மது பார் ஆட்களை மீறி வேறு யாரும் இந்தப் பகுதியில் கள்ளச் சந்தையில் சரக்கு விற்கவே முடியாது.
அப்படிப்பட்ட இடத்தில் ஒரு டாஸ்மாக் மதுபானக் கடையில் பூட்டை உடைத்து சரக்கைத் திருடுகிறார்கள் என்றால் அந்தச் சரக்கு யார் கைக்குப் போகும்... சம்பந்தப்பட்ட பார் வைத்திருக்கும் நபரிடம்தானே? அவர் போலீஸிற்கு மாமூல் கொடுக்காமல் இன்றைய தேதிக்கு ஒரு பாட்டில் மதுவை மூன்று மடங்கு லாபம் வைத்து விற்க முடியுமா?
ஆக, போலீஸிற்கும், கள்ள மது விற்பனையாளருக்கும், பூட்டை உடைத்து திருடுபவர்களுக்கும் இடையே தொடர்பு இருந்தே தீரும். போலீஸ் நினைத்தால் அவர்களைப் பிடிக்கலாம். ஆனால், பிடிக்க மாட்டார்கள். அதற்கு நாங்கள்தான் பலிகடா ஆக வேண்டியிருக்கிறது” என்றார் வேதனையுடன்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை மாவட்ட டாஸ்மாக் மதுபானக் கடை ஊழியர்கள் சங்கம் சிஐடியு மாவட்டச் செயலாளரும், மாநில துணைப் பொதுச் செயலாளருமான ஜான், “கடைச் சரக்குகளைத் திரும்ப எடுத்து டாஸ்மாக் குடோன்களிலேயே திரும்பவைத்து கணக்கை நேர் செய்ய முடியும். அதைச் செய்ய அலுவலர்கள் முன்வருவதில்லை. ஊழியர்கள் பொறுப்பிலேயே விடப் பார்க்கிறார்கள். எங்கள் கஷ்ட நஷ்டங்களை மேலிடத்திற்குத் தெரியப்படுத்திய பின்பே இந்த அளவுக்காவது இறங்கி வந்திருக்கிறார்கள். மற்றபடி கடைகளுக்குப் பூட்டுப் போடுவது, பூட்டி சீல் வைப்பது, ஷட்டருக்கு வெல்டிங் வைப்பது போன்ற செயல்கள் எல்லாம் அந்தந்தக் கடை ஊழியர்கள் தங்களது கடைப் பாதுகாப்புக்கு ஏற்ப செய்வது. இப்படியான ஒரு நெருக்கடி காலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம்தானே!” என்றார் .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT