Published : 01 Apr 2020 05:34 PM
Last Updated : 01 Apr 2020 05:34 PM
குமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசிக்கும் ஊர்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு மற்றவர்கள் உள்ளே செல்லவோ, ஊர் மக்கள் வெளியே வரவோ முடியாதபடி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அப்படி தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஊர்களில் மணிக்கட்டிப் பொட்டல் கிராமமும் ஒன்று. இதுதான் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலனின் ஊர்.
அண்ணாச்சி என குமரி மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்படும் பொன்னீலன் முற்போக்கு இலக்கியத்தின் முகமாக இருப்பவர். தன் படைப்புகளிலும், தான் பேசும் மேடைகளிலும் தன் சொந்த ஊரான மணிக்கட்டிப் பொட்டல் குறித்தும், அங்கு வாழும் மனிதர்கள் குறித்தும் நிறையத் தகவல்களைச் சொல்வார்.
சுற்றுவட்டாரத்தில் பெரிதான ஆலமரம், எப்போதும் வற்றாத குளம், சுற்றிலும் பலா மரங்கள் என தன் ஊரின் அழகியலை அத்தனை நுட்பமாகப் பதிவு செய்யும் பொன்னீலனிடம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபரால் முற்றாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அவரது ஊர் குறித்துப் பேசினேன்.
“எங்க ஊரோட அடையாளமா இருந்த அந்த உயரமான ஆலமரம் அதன் முட்டில் இருக்க ஆள்கள் இல்லாமல் ஏங்கும். எங்க ஊரு தெப்பக்குளத்துக்கு எப்போ போனாலும் நாலுபேர் குளிச்சிட்டு இருப்பாங்க. ஊரடங்கு காலத்திலும் அது இருந்துச்சு. ஆனா, ஊருல ஒருத்தருக்கு கரோனா உறுதியானதும் கெடுபிடி ஜாஸ்தி ஆகிடுச்சு. அந்த குளமும் ஆள் அரவம் இல்லாம ஆகிடுச்சு.
ஊரடங்கு, சுதந்திரத்தை ரொம்பவே கட்டுப்படுத்தியிருக்கு. ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாடியே வர்றேன்னு ஒத்துகிட்ட நிகழ்ச்சிகளுக்கும் போக முடியல. என்னோட சுதந்திரத்தையும் இது ரொம்பவே கட்டுப்படுத்திடுச்சு. பிறந்த மண்ணிலயே இப்படி அகதிபோல் ஒளிஞ்சு ஒளிஞ்சு கடை கண்ணிக்குப் போகும் சூழல் வரும்னு நான் நினைச்சுப் பார்த்ததே இல்ல. இது என்னோட என்பதாண்டு வாழ்க்கையில் பார்த்திராத நிகழ்வு!
நிறைய நண்பர்களை தினசரி சந்திப்பேன். நடைப்பயிற்சிக்குப் போவேன். அது எல்லாம் இப்போ நின்னுடுச்சு. பின்னே இந்த நேரத்தைப் பயன்படுத்தி நிறைய குறிப்பெடுக்குறேன். கட்டுரைகளும், சிறுகதைகளும் எழுதுறேன். நான் நேசிக்கும் ஊரிலேயே வெளியே போக முடியாமல் வெறுக்கும் நிலைக்கு வந்துட்டேன். ஊரோட ரெண்டு பகுதியிலும் போலீஸ் காவல் போட்டிருக்காங்க.
முகக் கவசம் போட்டுத்தான் வெளியில போறேன். 14-ம் தேதியோட ஊரடங்கு முடிஞ்சு இயல்பு வாழ்க்கைத் திரும்பணும்னு மீண்டும் மீண்டும் தோணிகிட்டே இருக்கு. மணிக்கட்டிப் பொட்டல் அவ்வளவு அழகு. காக்கியும், கட்டுப்பாடும் இல்லாத என் ஊரோட காத்து என் மேலபட காத்துக்கிட்டு இருக்கேன்'' என்கிறார் பொன்னீலன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...