Published : 01 Apr 2020 04:03 PM
Last Updated : 01 Apr 2020 04:03 PM
தாமாக முன்வந்து தகவல் கொடுக்க வேண்டும் என்று டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஏப்.1) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி அரசுக்குக் கிடைத்த தகவலின்படி டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில், புதுச்சேரியில் இருந்து 17 பேரும், காரைக்காலில் இருந்து 4 பேரும் மார்ச் 21, 22-ம் தேதி சென்றுள்ளனர். அதில் புதுச்சேரியைச் சேர்ந்த 17 பேரில் 11 பேர் டெல்லியில் தங்கிவிட்டனர்.
மீதமுள்ள 6 பேர் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த 3 பேர், திருவண்டார்கோயிலைச் சேர்ந்த 2 பேர், காட்டேரிக்குப்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆவர்.
இந்த 6 பேரையும் கண்டறிந்து மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த 2 பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து அறிக்கை வந்துள்ளது.
அதனடிப்படையில் அந்த இருவருக்கும் தனிப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மீதமுள்ளவர்கள் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் டெல்லியில் மாநாட்டை முடித்துவிட்டு மார்ச் 24-ம் தேதி புதுச்சேரி வந்துள்ளனர். அவர்கள் யாருடன் தொடர்புகொண்டனர், எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர் என்பதை கண்டறிய மருத்துவத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிிகாரிகள் அந்தப் பகுதிகளுக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்கின்றனர்.
அவர்களின் குடும்பத்தினருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் யாருக்காவது சந்தேகப்படும்படி கரோனா வைரஸ் தொற்று இருந்தால் மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்பப்படுவார்கள்.
காரைக்காலில் இருந்து டெல்லி சென்றவர்களில் 4 பேரில், ஒருவர் டெல்லியில் தங்கிவிட்டார். மீதமுள்ள 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த 3 பேரின் உமிழ் நீர், ரத்த மாதிரி எடுக்கப்பட்டு திருவாரூர் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் முடிவு வந்தபிறகு தனிப்பிரிவில் அல்லது கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.
மாநில அரசு சார்பில் புதுச்சேரியைச் சேர்ந்த 6 பேர், காரைக்காலைச் சேர்ந்த 4 பேரைத் தவிர வேறு யாரேனும் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு புதுச்சேரி வந்திருந்தால். தானாக முன்வந்து தகவல் கொடுக்க வேண்டும்.
கரோனா வைரஸ் கொடியது. இது டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு வந்தவர்களுக்கு அதிக அளவு உள்ளது.
எனவே, தாங்களாகவே முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
கரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுக்கு மருத்துவம் அளிக்க இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் தனிப் பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மேல் பரிசோதனை செய்யலாம்.
சந்தேகப்படுபவர்கள் அந்த மருத்துவக் கல்லூரிக்கு வர வேண்டும் அல்லது தங்கும் இடத்தில் இருந்து தொலைபேசியில் தெரிவித்தால், அங்கேயே வந்து மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்வார்கள்.
கரோனாவுக்கு மருந்து தனிமையாக இருப்பதுதான். ஆகவே மக்கள் பகல் 2.30 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. 90 சதவீதம் மக்கள் வீட்டில் இருக்கின்றனர். இது 100 சதவீதமாக இருந்தால்தான் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும். ஏப்ரல் 14 வரை தனிக் கட்டுப்பாட்டுடன் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும்".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT