Published : 01 Apr 2020 03:24 PM
Last Updated : 01 Apr 2020 03:24 PM
புதுச்சேரியிலிருந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 160 பேரை அந்நாட்டு தூதரகம் இன்று அழைத்துச் சென்றது. அவர்கள் பிரெஞ்சு தூதரகத்தில் இருந்து தனி பேருந்துகளில் சென்னை புறப்பட்டனர். அங்கு பிரான்ஸிலிருந்து வந்துள்ள தனி விமானத்தில் புறப்படுகின்றனர்.
பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை, இந்திய குடியுரிமை என இரட்டை குடியுரிமை பெற்றவர்களும் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.
புதுவை பிரெஞ்சு ஆதிக்கம் செலுத்திய பகுதி என்பதால் பிரான்ஸ் நாட்டினர் அதிகளவில் சுற்றுலா வருவர். அதுமட்டுமின்றி பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் பலர் புதுவையில் தங்கி படிக்கின்றனர். லிசே பிரான்சே, பிரெஞ்சு தூதரகம், கொலம்பானி, பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் ஆகியவற்றில் பிரான்ஸ் நாட்டினர் பணியாற்றி வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் விடுமுறையிலும், உறவினர்களை பார்க்கவும், சுற்றுலாவுக்காக கடந்த டிசம்பர் மாதம் புதுச்சேரி வந்தனர். இவர்கள் தங்களது நாட்டுக்கு திரும்புகிற நேரத்தில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக செல்ல முடியவில்லை.
இதனால் புதுச்சேரியில் முடங்கி இருந்த அவர்கள், தங்களது பிரச்சினை குறித்து தூதரகத்தில் தெரிவித்தனர்.
இதையடுத்து, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 160 பேரை, சொந்த நாட்டுக்கு அழைத்து வர பிரான்ஸ் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, 160 பேரும் இன்று பிரெஞ்சு தூதரகத்திற்கு வந்தனர்.
ஆவணங்கள் சரி பார்க்கப்பட்ட பிறகு அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டபேருந்தில் ஏறினர். புதுச்சேரி பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் பாதுகாப்புக்காக அவர்களுடன் சென்னை சென்றனர்.
பிரெஞ்சு தூதரக வட்டாரங்களில் விசாரித்தபோது, "விண்ணப்பத்தின் அடிப்படையில் புதுவை பிரெஞ்சு தூதரகம் குடியுரிமை பெற்ற 160 பேரை பிரான்ஸுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இதற்காக பிரான்ஸிலிருந்து 2 தனி விமானம் சென்னைக்கு வருகிறது. சென்னையிலிருந்து இவர்கள் பிரான்ஸ் கிளம்பிச்செல்ல உள்ளனர்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT