Published : 01 Apr 2020 02:57 PM
Last Updated : 01 Apr 2020 02:57 PM

வகுப்புவாத கரோனாவிலிருந்தும் விலகியிருங்கள்: தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வேண்டுகோள்

கரோனா கொடிய நோய். அதை மக்கள் ஒற்றுமையாக இருந்து எதிர்க்கவேண்டும். இந்தக் காலகட்டத்தில் சிலர் தொற்று நோய்க்கும் மதச் சாயம் பூசப் பார்க்கின்றனர். வகுப்புவாதம் எனும் வெறுப்புவாதமும் ஒருவகை கரோனாவே. அதனிடமிருந்தும் மக்கள் விலகி நிற்க வேண்டும் என தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன், க.உதயகுமார் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“கரோனா எனும் கொடூரம் உலகத்தையே தாக்கி வருகிறது. அதற்கு நாடு, இனம், மதம், சாதி வித்தியாசம் எல்லாம் கிடையாது. இந்த உலகளாவிய ஆபத்தை உலகளாவிய அளவில் எதிர்த்து நிற்க வேண்டும். ஆனால் சில தலைவர்கள் தொற்றுநோய்க்கும் மதச் சாயம் பூசப் பார்க்கிறார்கள்.

டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டை சுட்டிக்காட்டி முஸ்லிம்களே கரோனா பரவலுக்குக் காரணம் என்பதுபோல ஒரு வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். இதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது.

டெல்லி மாநாட்டில் பங்கு கொண்ட சிலருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் அதில் பங்குகொண்ட இதரரையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவருவது அவசியமே. ஆபத்தை உணர்ந்து அவர்களே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் நியாயமே. மேடையும் அந்த வேண்டுகோளை உரிமையோடு முன்வைக்கிறது.

ஆனால் இதைச் சாக்கிட்டு தமிழகத்தில் சில தலைவர்களும் இதர சங் பரிவாரமும் நடத்துவது வகுப்புவாத பிரச்சாரமாகும். நோயைப் பரப்பவே தப்லீக் ஜமாத்தானது மாநாட்டை நடத்தியது, அதன் பெயர் "கரோனா ஜிகாத்" என்று கூச்சமின்றிக் கூறுகிறார்கள்.

தங்களது மத மாநாட்டில் தெரிந்தே தொற்று நோயைக் கொண்டு வருவார்களா? அதனால் ஆபத்து தங்களுக்குத்தான் என்பதை அவர்கள் அறியார்களா? அவதூறு பரப்புவோர் தர்க்க நியாயம் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். இவர்களது நோக்கம் எப்படியாகிலும் மதப் பகைமையை ஊட்டுவதுதான் என்பதை இந்த அவதூறு உணர்த்துகிறது.

இதன் நோக்கம் மத்திய அரசு செய்த மன்னிக்க முடியாத காலதாமதத்தை மறைப்பதாகும். இந்தியாவில் முதல் கரோனா பாதிப்பு அறியப்பட்டது ஜனவரி 30-ல். பிப்ரவரி முதல் வாரத்திலேயே வெளிநாட்டவரின் வருகையைத் தடுத்திருந்தால், வெளிநாடுகளிலிருந்து வரும் இந்தியர்களை தனிமைப்படுத்தியிருந்தால் இன்றைக்கு ஏற்பட்டுள்ள கரோனா பரவலை வெற்றிகரமாகத் தடுத்திருக்க முடியும். அதைச் செய்யத்தவறியது மத்திய அரசு.

நாட்டின் பிரதமர் மார்ச் 22-ல் தான் ஒருநாள் ஊரடங்கை நடத்தினார். அதற்கும் பிறகு தான் 21 நாள் ஊரடங்கு. இடைப்பட்ட காலத்திலும் போதிய முன்தயாரிப்புகள் இல்லை என்பதை டெல்லி மக்கள் ஆயிரக்கணக்கில் கால்நடையாக சொந்த ஊருக்குக் கிளம்பியது உணர்த்தியது.

இந்தக் காலத்தில்தான் தப்லீக் மாநாடு மட்டுமல்ல, ட்ரம்ப்பை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டியதும் நடந்தது. பல்வேறு விழாக்கள் நடந்தன. இவற்றால் எல்லாம் நோய்த் தொற்று எந்த அளவுக்குப் பரவியதோ தெரியாது.

இன்று செய்ய வேண்டியது கரோனா பரிசோதனையை அறிகுறி உள்ள அனைவருக்கும் இலவசமாக நடத்துவது, அதற்கான கூடங்களை அதிகப்படுத்துவது, நோய் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சைக்குத் தேவையான வென்ட்டிலேட்டர் போன்ற கருவிகளை வழங்குவது, ஊரடங்கால் அவதிப்படும் கோடிக்கணக்கான அன்றாடங் காய்ச்சிகளுக்கு உரிய இழப்பீடு தருவது இத்யாதிகள்.

இதில் கவனம் செலுத்தாமல் மதமாச்சரியத்தைத் தூண்டுவது ஈவிரக்கமற்ற காரியமாகும் என்பதை மேடை சுட்டிக்காட்டுகிறது. வகுப்புவாதம் எனும் வெறுப்புவாதமும் ஒருவகை கரோனாவே, அதனிடமிருந்தும் மக்கள் விலகி நிற்க வேண்டும். உடல் நோயிலிருந்து மட்டுமல்லாது உள்ளத்து நோயிலிருந்தும் தப்பிக்க இந்த விலகல் அவசியம் என்பதை மேடை எடுத்துக் காட்டுகிறது”.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x