Published : 01 Apr 2020 02:41 PM
Last Updated : 01 Apr 2020 02:41 PM

கரோனாவால் வாசமிழந்த மதுரை மல்லிகை: மூடிய ‘சென்ட்’ தொழிற்சாலைகளை திறக்க தமிழக அரசு சிறப்பு அனுமதி

மதுரை

‘கரோனா’ ஊரடங்கால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. வாசனை திரவியங்கள் தயார் செய்யும் சென்ட் தொழிற்சாலைகளும் மூடப்பட்ட நிலையில் செடிகளில் கருகி வாசமில்லாமல் போனது மதுரை மல்லிகை.

இந்நிலையில், மதுரை மல்லிகைப் பூக்களைக் காப்பாற்ற ‘சென்ட்’ தொழிற்சாலைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனால் இன்று முதல் செயல்படத் தொடங்கின.

மதுரை மல்லிகைக்கு ஆண்டு முழுவதும் உள்நாட்டு மலர் சந்தைகள் மட்டுமில்லாது உலக சந்தைகளிலும் பெரும் வரவேற்பு உண்டு.

சிங்கப்பூர், துபாய், இந்தோனேசியா போன்ற வெளிநாட்டு ‘சென்ட்’ தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு மதுரையில் விளைவிக்கும் மல்லிகைப்பூக்களை விவசாயிகள் விமானங்கள் மூலம் ஏற்றுமதி செய்தனர்.

உள்ளூர் சந்தைகளில் நிரந்தரமாகவே மதுரை மல்லிகை கிலோ ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விற்கும். விழாக்காலங்களில் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனையாகும். அதனால், வியாபாரிகள் மதுரை மல்லிகையை ‘வெள்ளைத் தங்கம்’ என்றும் சொல்வார்கள்.

அப்படிச் சந்தைகளில் வரவேற்பும், மவுசும் பெற்ற மதுரை மல்லிகையைக் கடந்த 2 வாரமாக சீந்த ஆளில்லை. ‘கரோனா’ ஊரடங்கு உத்தரவால் திருமண நிகழ்ச்சிகள், விழாக்கள், கோயில் பூஜைகள் அனைத்தும் தடைப்பட்டன. வெளிநாடுகளுக்கு விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன.

மேலும், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கியதால் மல்லிகைப் பூக்களின் தேவை இல்லாமல் போனது. மல்லிகைப்பூ அத்தியாவசியப்பொருட்கள் பட்டியலில் வராது என்று சொல்லி சந்தைகளுக்கு கொண்டு விற்கவும் போலீஸார் அனுமதி மறுத்தனர்.

அதனால், மதுரை மல்லிகைப்பூக்களை விவசாயிகள் பறிக்காமல் விட்டதால் செடிகளிலே கருகி கீழே உதிர்ந்து விழுந்தன.‘சென்ட்’ தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பலாம் என்றால் தொழிறசாலைகளுக்கு ‘கரோனா’ பரவும் என்பதால் ‘ஊரடங்கு’ உத்தரவால் மூடப்பட்டுவிட்டன.

பறித்த பூக்களை எங்கும் விற்க முடியாமல் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்ததால் தண்ணீர் பாய்க்காமல் செடிகளை கைவிட தொடங்கினர். இந்த நிலை நீடித்தால் மதுரை மல்லிகைப்பூ அடையாளம் தெரியாமல் அழியும் அபாயம் ஏற்பட்டது.

அதனால், தமிழக தோட்டக்கலைத்துறை செயலர், இயக்குனர் தமிழக அரசிடம் பேசி, குறைந்தப்பட்சம் ‘சென்ட்’ தயாரிக்கும் தொழிற்சாலைகளை திறக்க அனுமதி கோரினர்.

மதுரை மல்லிகையின் பாரம்பரியத்தையும், எதிர்காலத்தில் அதன் தேவையையும் கருதி தமிழகத்தில் ‘சென்ட்’ தயாரிக்கும் தொழிற்சாலைகளை செயல்பட நேற்றுமுதல் அரசு சிறப்பு அனுமதி வழங்கியது.

கோவையில் ஒரு சென்ட் தொழிற்சாலை, திண்டுக்கல்லில் 5 சென்ட் தொழிற்சாலைகள் தற்போது இந்த ‘கரோனா’ ஊரடங்கிலும் செயல்பட தொடங்கியுள்ளது. மதுரையில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதிகளில் இருந்து இன்று முதல் 8 டன் மல்லிகைப்பூக்களை விவசாயிகள் ‘சென்ட்’ தொழிற்சாலைகளுக்கு அனுப்ப தொடங்கினர்.

ஒரிரு நாளில் 15 டன் வரை விவசாயிகள் அனுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பூபதி கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும், கோடை காலம் முக்கிய சீசன் காலம். அதனாலே மல்லிகை பூக்களை அத்தியாவசியப்பொருட்கள் பட்டியலில் சேர்த்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்லவும் அரசு வாகனங்களுக்கு பர்மிட் வழங்கியுள்ளது.

ஒரு கிலோ மல்லிகை 100 ரூபாய்க்கு கீழ் இருந்தால் மட்டுமே சென்ட் தொழிற்சாலைகளுக்கு லாபம். கிலோ ரூ.1000, ரூ.1,500 விற்றால் அவர்களுக்கு நஷ்டமே ஏற்படும்.

அதனாலேயே, தமிழகத்தில் செயல்பட்ட பல சென்ட் தொழிற்சாலைகள் கடந்த காலத்தில் தொடர்ச்சியாக இயக்க முடியாமல் மூடப்பட்டன. அந்த தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க ஏற்பாடு செய்வோம், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x