Published : 01 Apr 2020 02:37 PM
Last Updated : 01 Apr 2020 02:37 PM

கரோனா தடுப்பு சிகிச்சை அளிக்க எங்கள் அலுவலகங்களை எடுத்துக் கொள்ளலாம்: இந்திய கம்யூனிஸ்ட் கடிதம் 

கரோனா தடுப்பு சிகிச்சை அளிக்க எங்களது கட்சி அலுவலகங்களை எடுத்துக் கொள்ளலாம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சென்னை மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம் அளித்துள்ளது.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு திரட்டும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என கட்சி அமைப்புகளையும் ஆதரவாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. முதல் கட்டமாக மாநிலக் குழு ரூ.10 லட்சம் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குகிறது.

இதன் தொடர்ச்சியாக கரோனா வைரஸ் தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க, தலைநகர் சென்னையில் 43, டாக்டர் செவாலியே சிவாஜி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை 600 017 என்ற முகவரியில் உள்ள கட்சி மாநில அலுவலகமான “பாலன் இல்லம்” அடுக்ககத்தில் 2 ஆம் தளம் மற்றும் 4 ஆம் தளம் ஆகிய 7000 +7000 = 14,000 சதுர பரப்பளவு கொண்ட இரு தளங்களையும் அரசு பயன்படுத்தி கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த இரு தளங்களின் இரு திசைகளிலும் மின்தூக்கி, குடி தண்ணீர், காற்றோட்ட வசதி அனைத்தும் உள்ளன.

இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளராகிய நான், சென்னை பெருநகர ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தை, தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.ஏழுமலை, வடசென்னை மாவட்ட மேலாளர் எம்.எஸ்.மூர்த்தி ஆகியோர் இன்று சென்னை பெருநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.

கடிதத்தைப் பெற்றுக் கொண்ட ஆணையர், இதுபோல் வேறு அமைப்புகளும் ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளன. அரசுடன் கலந்து பேசி உரிய முறையில் பயன்படுத்திக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திருப்பூர் மாநகரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம், கோவை மாநகரில் உள்ள கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கம், ஈரோடு மாநகரில் உள்ள மாவட்டக் கட்சி அலுவலகம், விழுப்புரம், சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள மாவட்டக் கட்சி அலுவலகங்கள் ஆகியவற்றை கரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் கடிதங்களை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலம் வழங்கப்படுகின்றன எனத் தெரிவித்துக் கொள்கிறோம்”.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x