Published : 29 Aug 2015 11:24 AM
Last Updated : 29 Aug 2015 11:24 AM
டெல்லியில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டை தேசிய அறிவுசார் கண்டுபிடிப்பு மையமாக அமைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்துக் கோரிக்கை விடுத்தனர்.
மறைந்த குடியரசு முன்னாள் தலைவரின் பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலிம் மற்றும் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோர் வெள்ளிக்கிழமை மாலை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து மத்திய அரசிற்கு கோரிக்கை கடிதத்தை கொடுத்தனர்.
இது குறித்து கலாமின் பேரன் ஷேக் தாவூத் நமது செய்தியாளரிடம் கூறியதாவது,
டெல்லி ராஜாஜி மார்க் 10ம் என்ற முகவரியில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தமது வாழ்நாளில் கடைசி வரையிலும் தங்கி இருந்தார்.
கலாம் வாழ்ந்து மறைந்த இந்த வீட்டினை அவரது நினைவாக , ‘தேசிய அறிவுசார் கண்டுபிடிப்பு மையம்’ அமைக்க வேண்டும். இதன் மூலம் கலாம் தம் வாழ்நாள் முழுவதும் சேர்த்த நூல்கள், அவர் எழுதியப் புத்தகங்கள், கலாமின் தொலை நோக்கு பார்வைகளை நமது மாணவர்களும், இளைஞர்களும் பெற முடியும்.
மேலும், ராமேசுவரத்தில் கலாமிற்கு நடைபெற்ற இறுதிச் சடங்கில் அளித்த ஆதரவுக்காக மத்திய அரசிற்கு நன்றியை தெரிவித்ததுடன், அக்டோபர் 15 கலாம் பிறந்த நாளிலும், ஜுலை 27 நினைவு நாளில் பேக்கரும்பு கலாம் நினைவிடத்தில் அரசு மரியாதையுடன் நடைபெற வேண்டும், என கோரிக்கை மனு அளித்தோம்.
இதனை பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இதனை உடனடியாக பிரதமர் நரேந்திரமோடியின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்போம், என்றார்.
இவ்வாறு ஷேக் தாவூத் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT