Published : 01 Apr 2020 01:08 PM
Last Updated : 01 Apr 2020 01:08 PM
ஈஷாவில் ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை எனவும் வதந்தி பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஈஷா யோகா மையம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக, ஈஷா யோகா மையம் தரப்பில் இன்று (ஏப்.1) வெளியிடப்பட்ட அறிக்கையில், "உலக சுகாதார நிறுவனம் கோவிட் - 19 வைரஸை ஒரு நோய் பெருந்தொற்று என அறிவிப்பதற்கு முன்பாகவும், மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு மற்றும் பயணத் தடைகளை விதிப்பதற்கு பல நாட்கள் முன்பாகவே ஈஷாவுக்கு வந்த வெளிநாட்டினருக்கு சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து அதை தீவிரமாகச் செயல்படுத்தினோம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சீனா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட கோவிட் -19 வைரஸ் தாக்கிய நாடுகளை சேர்ந்தோர் ஈஷா யோகா மையத்துக்கு வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தோம். மேலும், கோவிட் - 19 வைரஸ் தாக்கிய நாடுகளுக்குச் சென்றவர்கள், அந்த நாடுகளின் விமான நிலையங்கள் வழியாக வந்தவர்களும் ஈஷாவுக்கு வர வேண்டாம் என்று தெரிவித்து இருந்தோம்.
ஈஷாவுக்கு வந்த மற்ற வெளிநாட்டினர்கள் கட்டாயம் 28 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. கட்டாய மருத்துவப் பரிசோதனை மற்றும் உடல்ரீதியான இடைவெளி நெறிமுறைகளை தற்போது வரை ஈஷா பின்பற்றி வருகிறது.
ஈஷா யோகா மையத்தில் தங்கி இருப்பவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு சாதாரண நாட்களில் கூட கடுமையான மருத்துவ மற்றும் சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இப்போது அவர்கள் 2 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதைக் கட்டாயமாக்கி உள்ளோம்.
ஈஷா மையத்தில் தங்கி பாதுகாப்புப் பணி, தூய்மைப் பணி மற்றும் பிற களப் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த நெறிமுறை பொருந்தும். மேலும், ஈஷா வளாகத்தின் பல இடங்களில் கையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் கிருமி நாசினிகளும் வைக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி மாதத்தில் இருந்தே மாநில சுகாதார அதிகாரிகள் ஈஷா யோகா மையத்துக்கு தொடர்ந்து வருகை தந்து மருத்துவப் பரிசோதனைகளைப் பார்வையிட்டு வருகின்றனர். இதுவரை இங்கு தங்கியுள்ள ஒருவருக்குக் கூட கரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக, ஆதாரமின்றி வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஈஷா யோகா மையம் அனைத்துவிதமான மருத்துவ நெறிமுறைகளை அமல்படுத்தும் திறனுடன் இருப்பது மட்டுமின்றி, தனிமைப்படுத்துதல் மற்றும் உடல்ரீதியான இடைவெளியை ஆரம்பத்திலேயே அமல்படுத்திவிட்டது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஈஷா வளாகத்தை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ளலாம் என ஈஷா சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT