Published : 01 Apr 2020 12:32 PM
Last Updated : 01 Apr 2020 12:32 PM
அரிசி, எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த சில நாட்களில் தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.1) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஊரடங்கு ஆணை காரணமாக போக்குவரத்துக்கும், அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் ஆலைகள் இயக்கத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், சந்தையில் அவற்றின் வரத்துக் குறைந்து, அதன் காரணமாக விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் அடுத்த சில நாட்களில் தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.
ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று எட்டாவது நாள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரிசி விலை கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்திருக்கிறது. மளிகைக் கடைகளிலும், அரிசி மட்டும் விற்பனை செய்யும் கடைகளிலும் மிகக்குறைந்த அளவிலேயே அரிசி இருப்பு உள்ளது. சில்லறையில் விற்பனை செய்வதற்கான வணிகத் தரப்பெயர் இல்லாத அரிசி மூட்டைகள் எங்குமே இல்லை. வணிகத் தரப்பெயர் கொண்ட அரிசி மூட்டைகள் மட்டுமே சந்தைகளில் கிடைக்கின்றன. அவற்றின் விலை இயல்பாகவே அதிகம் என்பதால், கூடுதல் விலையை மக்கள் மீது சுமத்த வேண்டியிருப்பதாக வணிகர்கள் கூறுகின்றனர். அதுவே விலை உயர்வுக்குக் காரணம்.
அதுமட்டுமின்றி, இப்போதுள்ள அரிசி இருப்பு இன்னும் சில நாட்களுக்கு மட்டும் தான் போதுமானது என்பதால், அடுத்த வாரத்தில் கடுமையான அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் என வணிகர்கள் கூறுகின்றனர். ஆனால், அதற்கு முன்பே அரிசி விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரையிலும், 100 கிலோ மூட்டைக்கு 1,000 ரூபாய் வரையிலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அரிசி வணிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல், அனைத்து வகையான எண்ணெய்களின் விலைகள் 30% வரை உயர்ந்திருக்கின்றன. பருப்பு வகைகளின் விலைகள் 40 முதல் 50 விழுக்காடு வரை உயர்ந்துள்ளன. ஒரு கிலோ உளுத்தம் பருப்பின் விலை 110 ரூபாயிலிருந்து 150 ரூபாயாகவும், துவரம் பருப்பின் விலை 80 ரூபாயிலிருந்து 120 ரூபாயாகவும், பாசிப்பருப்பு விலை 100 ரூபாயிலிருந்து 150 ரூபாயாகவும் உயர்ந்திருக்கின்றன. மிளகாய், மல்லி, பூண்டு, வெந்தயம் ஆகியவற்றின் விலைகளும் 65% வரை அதிகரித்திருக்கின்றன.
இந்தியா முழுவதும் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாலும், ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திலிருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாலும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு அரிசி வருவது முற்றிலுமாக தடைபட்டு விட்டது. இத்தகைய சூழலில் விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் இருந்து கிடைக்கும் அரிசியைக் கொண்டுதான் தமிழகத்தின் அரிசித் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.
ஆனால், அங்குள்ள அரிசி ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதால் அரிசி உற்பத்தி முழுமையாகத் தடைபட்டு விட்டது. அதுவும், ஆலைகளில் உற்பத்தி செய்து வைக்கப்பட்டுள்ள அரிசியையும் சந்தைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை என்பதும்தான் விலை உயர்வுக்கும், தட்டுப்பாட்டுக்கும் காரணமாகும். எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளின் விலைகள் அதிகரித்ததற்கும் இவைதான் காரணங்கள் ஆகும்.
இத்தகைய சூழலில், தமிழகத்திலுள்ள அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் ஆலைகள், மருத்துவத் துறையால் பரிந்துரைக்கப்படும் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, செயல்பட அனுமதிப்பதன் மூலமாகவும், அந்த ஆலைகளில் உள்ள அத்தியாவசியப் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல அனுமதிப்பதன் மூலமாகவும் மட்டும்தான் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியும்; தட்டுப்பாட்டையும் போக்க முடியும்.
ஊரடங்கு ஆணையை தமிழக அரசு சிறப்பாகவே நடைமுறைப்படுத்தி வருகிறது. இது மிகவும் நெருக்கடியான காலகட்டம் என்பதால், சூழலுக்கு ஏற்ப எடுக்கப்பட்ட சில கடுமையான நடவடிக்கைகளை ஓரளவு தளர்த்துதல், வேறு சில நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை பொதுமக்களின் தேவைகளுக்கு அரசு எடுத்து வருகிறது.
ஊரடங்கு ஆணை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை ஆலைகள் மூடப்பட்ட நிலையில், விவசாயம் சார்ந்த பணிகளுக்கு அளிக்கப்பட்ட விலக்கு, தேயிலைக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில், தேயிலை ஆலைகளை திறக்க நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உற்பத்தியும் விவசாயம் சார்ந்த பணிதான் என்பதாலும், அவை தான் மிக முக்கியமான உணவுப் பொருட்கள் என்பதாலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி, பருப்பு, எண்ணெய் ஆலைகளையும் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். அந்த ஆலைகளில் இருந்து தமிழகம் முழுவதும் சரக்குந்துகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல அரசு அனுமதிக்க வேண்டும்" என் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT