Published : 01 Apr 2020 12:06 PM
Last Updated : 01 Apr 2020 12:06 PM
உலகையே அச்சுறுத்தினாலும் கரோனா வைரஸ் மனிதாபிமானமுள்ள பல நூறு பேரை இவ்வுலகுக்குத் தொடர்ந்து அடையாளம் காட்டி வருகிறது. அப்படித்தான் வேதாரண்யம் பூ வியாபாரிகள் பலரும் ‘தங்களுக்கு வட்டி வேண்டாம்’ என்று அறிவித்ததன் மூலமாக வெளியுலகுக்குத் தெரிய வந்திருக்கிறார்கள்.
ஆம், மலர் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள வேதாரண்யம் பகுதி விவசாயிகள், தங்களிடம் வாங்கியுள்ள கடனுக்கான வட்டியை இம்மாதம் கட்ட வேண்டாம் என்று மலர் வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
இப்பகுதியில் சுமார் 20 ஆயிரம் பேர் பூக்கள் சாகுபடி செய்து வருகிறார்கள். அதனால் இப்பகுதி பூ வணிகத்தில் சிறந்து விளங்குகிறது.
இங்கு விளையும் பூக்கள் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு திருவாரூர், தஞ்சை, திருச்சி, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் பூப்பறிக்க ஆட்கள் வராமலும், பறிக்கும் பூக்களை அனுப்பி வைக்க வாகனங்கள் இல்லாமலும் தவித்து வருகின்றனர் விவசாயிகள். இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் பல ஆயிரக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயச் செலவுகளுக்காகவும், தங்கள் குடும்பச் செலவுகளுக்காகவும் மொத்த வியாபாரிகளிடம் கடன் பெற்றுள்ளார்கள். சில ஆயிரங்களில் இருந்து லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளனர். பூ விவசாயிகளைத் தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு வியாபாரிகளும் அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். அம்மாதம் எவ்வளவு தொகைக்கு பூ கொடுத்திருக்கிறார்களோ அத்தொகையை கழித்துக்கொண்டு மீதமுள்ள தொகைக்கு குறைந்த வட்டியை விவசாயிகளிடம் வசூலிப்பது இங்குள்ள நடைமுறை.
இந்நிலையில் இந்த ஊரடங்கால் பூப்பறிக்காமல் நஷ்டமும், பூ விற்பனை இல்லாமல் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ள நிலையில், தாங்கள் வாங்கியுள்ள கடனுக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று விவசாயிகளும், கருப்பம்புலம் சித்திரவேலு போன்ற சமூக ஆர்வலர்களும் பூ வியாபாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனையேற்றுக் கொண்டுள்ள மொத்த வியாபாரிகளில் முதல் கட்டமாக வி.சபாபதி, வி,செந்தில், ஆர்.எல்.ராமதாஸ், இரா.கனகராஜ் பிரதர்ஸ், எஸ்.சண்முகதேவர், கே.ஆர்.எஸ் பிரதர்ஸ், ஜி.தாயுமானவதேவர், ஆர்.தம்பா ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், ''பாதிப்பான காலத்துக்கு விவசாயிகள் தங்களுக்கு வட்டி தர வேண்டாம்'' என அறிவித்துள்ளனர். இருநூறுக்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகள் இருக்கும் நிலையில், இவர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து, மற்ற பூ வணிகர்களும் வட்டி சலுகையை அறிவிப்பார்கள் என பூ விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT