Published : 01 Apr 2020 11:55 AM
Last Updated : 01 Apr 2020 11:55 AM

ஆபத்தில் தமிழகம்: சமூகப் பரவலைத் தடுக்க சமூகப் பொறுப்பு வேண்டும்; அன்புமணி

அன்புமணி: கோப்புப்படம்

சென்னை

டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் தாமாக முன்வந்து கரோனா ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி இன்று (ஏப்.1) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் குறித்து கடந்த சில நாட்களாக வெளியாகி வரும் தகவல்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதும், பாதிக்கப்பட்டவர்களில் 50 பேருக்கு ஒரே ஆதாரத்திலிருந்து நோய்த்தொற்று ஏற்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியும் தமிழ்நாட்டு மக்களைக் கொடிய அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்தியாவில் நேற்றிரவு நிலவரப்படி கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,554 ஆக உயர்ந்து இருந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் 303 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்நாளில் 255 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐக் கடக்க 54 நாட்கள் ஆயின. ஆனால், கடந்த இரு நாட்களில் மட்டும் 558 பேரை கரோனா வைரஸ் தாக்கியுள்ளது.

மற்றொரு பக்கம் தமிழகத்தின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. தமிழகத்தில் முதல் தொற்று ஏற்பட்ட மார்ச் 7-ம் தேதி முதல் நேற்று வரையிலான 24 நாட்களில் தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 மட்டும் தான். ஆனால், நேற்று ஒரு நாளில் 24 நாட்களின் எண்ணிக்கைக்கு இணையாக 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் எத்தகைய ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை இது விளக்கும்.

தமிழ்நாட்டில் நேற்று கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 50 பேர் மார்ச் மாதத் தொடக்கத்தில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

அதேபோல், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட 124 பேரில் 80 பேர் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் திடமாக இருக்கிறார்கள் என்றாலும் கூட, தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அடுத்த சில நாட்களில் அபாயகரமான அளவில் அதிகரிக்கும் என்பதுதான் கவலையளிக்கிறது.

டெல்லியில் நடந்த மாநாட்டில் தமிழகத்திலிருந்து 1,131 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் இதுவரை 515 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குதான் கரோனா வைரஸ் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள 616 பேர் இன்று வரை அடையாளம் காணப்படவில்லை. இதுதான் தமிழகத்தில் சமூகப் பரவலைத் தொடங்கி வைத்துவிடுமோ அல்லது தொடங்கி வைத்திருக்குமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்க வேண்டுமானால், இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில், இன்னும் சோதனை செய்யப்படாதவர்களுக்கு உடனடியாக சோதனை செய்யப்பட வேண்டும். இன்று வரை அடையாளம் காணப்படாத 616 பேரையும் உடனடியாக அடையாளம் கண்டு, அவர்களுக்கு கரோனா சோதனை செய்யப்பட வேண்டும். சமூகப் பரவலைத் தடுக்க இது அவசியம்.

616 பேர் குறித்த உறுதியான தகவல் எதுவும் இல்லாத நிலையில், அவர்களை அரசு கண்டுபிடித்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றால், அதற்குள் நிலைமை எல்லை மீறி விடக்கூடும்.

ஏனெனில், அடையாளம் காணப்படாத 616 பேரில் எவருக்கேனும் கரோனா பாதிப்பு இருந்தால், அதைக் கண்டுபிடித்து மருத்துவம் அளிக்காதபட்சத்தில், அறியாமையால் அவர்களின் உயிருக்கு அவர்களே ஆபத்தை ஏற்படுத்திக்கொள்வது மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் பரவுவதற்குக் காரணமாக இருந்து விடக்கூடும். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி பொதுவெளியில் நடமாடினால், அவர் மூலமாக ஒரு வாரத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவும் ஆபத்துள்ளது.

டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு மார்ச் 15 ஆம் தேதிக்கு முன்பு நிகழ்ந்தது என்பதால், இப்போதே காலம் கடந்து விட்டதாகத்தான் தோன்றுகிறது. எனவே, டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் தாங்களாகவே முன்வந்து கரோனா ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்வது அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் மிகுந்த நன்மை பயக்கும்.

தமிழ்நாட்டு மக்களும் கடந்து சென்ற நாட்களை விட இனி வரும் நாட்களில் இன்னும் கூடுதலாக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களையும் அறியாமல் பொதுவெளியில் நடமாடக்கூடும் என்பதால், வீடுகளை விட்டு வெளியில் வராமல் இருப்பதுதான் பொதுநலனுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் நேற்று வரை பொதுமக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றுதான் மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனாலும், அந்த அறிவுரையை அலட்சியம் நிறைந்த, ஆபத்தை உணராத ஒரு பிரிவினர் மதிக்காமல் சாலைகளில் சாகசம் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால், கடந்த காலங்களை விட இப்போது ஆபத்து அதிகரித்திருக்கும் நிலையில் இனியாவது அனைவரும் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

இன்றைய சூழலில் நம் முன் எழுந்துள்ள மிகப்பெரிய வினா தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் மிகவும் வேகமாகப் பரவி, அதனால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்படுவதை எவ்வாறு தடுக்க முடியும்? என்பதுதான். இதைத் தவிர வேறு வினாக்களுக்கும், சர்ச்சைகளுக்கும் எவரும் இடம் கொடுத்துவிடக் கூடாது.

ஆகவே, டெல்லி மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள் தாங்களாக முன்வந்து கரோனா ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், அனைத்து தரப்பினரும் வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதுடன், தங்களின் சமூகப் பொறுப்பையும் வெளிப்படுத்த வேண்டும்" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x