Published : 01 Apr 2020 10:43 AM
Last Updated : 01 Apr 2020 10:43 AM
கரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள மஞ்சளும், வேப்பிலையும் உதவும் என்ற தகவல் தமிழ்நாடு முழுக்கப் பரவியதன் விளைவு, வேப்பமரங்களை மொட்டையடித்து, கடைகளில் மஞ்சள் பொடிக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள் மக்கள்.
முதலில் வீட்டு வாசலில் மஞ்சள் தெளித்து, தலைவாசல் நிலையில் வேப்பிலை மட்டுமே கட்டிய மக்கள், மஞ்சள் கலந்த வாளித் தண்ணீரை வாசலில் வைத்து கை, கால் அலம்பப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். பலசரக்குக் கடை மற்றும் காய்கறிக் கடை நடத்தும் பெண்களில் பலர் உள்ளங்கையில் இருந்து முழங்கை வரையில் தினமும் மஞ்சள் பூசிக் கொண்டிருக்கிறார்கள். பல கிராமங்களின் நுழைவாயிலில், வேப்பிலை தோரணமாகத் தொங்குகிறது. இவை மருத்துவமா, மூடநம்பிக்கையா என்ற விவாதம் ஒருபுறம் நடக்கிறது.
தமிழர் வாழ்வியலில் மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் என்ன பங்கு இருக்கிறது? என்று தமிழர்களின் பண்பாட்டையும், வாழ்க்கை முறையையும் விரிவாகக் கள ஆய்வு செய்திருக்கும் பேராசிரியர்கள் தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணின் ஆகியோருடன் பேசினோம்.
"தமிழர் வாழ்வில் மஞ்சள் ஆரோக்கியம் தொடர்பான ஒரு பொருளாகவே இருந்திருக்கிறது. வெப்ப மண்டல உயிர்கள், நீராடுவதில் பெரும் விருப்பம் உடையன. குளிர்த்தல் என்ற வார்த்தையையே நாம் இப்போது குளித்தல் என்று சொல்கிறோம். அவ்வாறு குளிக்கும்போது தமிழர்கள் சவுக்காரமாக (சோப்) எதைப் பயன்படுத்தினார்கள் என்று பார்த்தால், இலக்கியங்களில் பல சான்றுகள் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மஞ்சள். நுணுக்கிய மஞ்சளால் கண்ணனை யசோதா நீராட்டினாள் என்று பெரியாழ்வாரின் பாசுரம் பாடுகிறது.
பூப்பு நீராட்டை மஞ்சள் நீராட்டு என்று குறிப்பிடுவது நம் வழக்கமாக உள்ளது. பழந்தமிழர் மரபில் மஞ்சள் நீராட்டு என்ற சொல், பூப்பு நீராட்டினை மட்டுமே குறிப்பதன்று. போர்க்களம் செல்லும் வீரர்கள் மஞ்சள் நீராடி, மஞ்சள் உடை உடுத்திச் செல்வர். அது இறப்பினை எதிர்கொள்ளும் வீர உணர்வையும், தியாக உணர்வையும் குறிக்கும்.
இந்த வழக்கத்தின் தொல்லெச்சமாகவே அரக்கனை அழிக்கச் செல்லும் தாய்த் தெய்வத்தின் சாமியாடி (பிரதிநிதி) மஞ்சள் நீராடி மஞ்சள் உடை உடுத்திச் செல்கிறார். வெப்ப மண்டல மனிதர்களைப் போலவே அவர்கள் வழிபடும் சிவன், திருமால் ஆகிய தெய்வங்களும் நாள்தோறும் குளிர்க்கின்றன. இதற்குத் திருமஞ்சனம் ஆடல் என்று பெயர்" என்கிறார் பேராசிரியர் தொ.பரமசிவன்.
பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனிடம் கேட்டபோது, "வேப்பம்பூ என்பது மூவேந்தர்களில் பாண்டியர்களின் அடையாளம். மருத்துவம் சார்ந்தும், நம்பிக்கை சார்ந்தும் நம் மக்கள் வேப்பிலையைப் பயன்படுத்துகிறார்கள். அம்மை நோய் கண்டவர்களுக்கு விசிறிவிட வேப்பிலையும், அம்மைப் புண்களால் ஊறல் எடுக்கிறபோது தடவிக் கொடுக்க வேப்பங்கொழுந்தையுமே நம்மவர்கள் பயன்படுத்துவார்கள்.
அம்மை நோய் குணமானவர்களைக்கூட முதன் முதலில் குளிப்பாட்டுகிறபோது, மஞ்சளும், வேப்பிலையும் கலந்த தண்ணீரைத்தான் பயன்படுத்துவார்கள். அம்மை விளையாண்ட வீடுகளுக்கு மற்றவர்கள் வருவதைத் தடுப்பதற்காக, வீட்டு வாசலில் அடையாளத்துக்கு வேப்பிலையைக் கட்டுவதும் வழக்கம். இந்த யுக்திதான் ஊமைத்துரையின் உயிரையே காப்பாற்றியது.
இரண்டாவது பாஞ்சாலங்குறிச்சிப் போரில் காயமுற்ற தன் மகனைத் தேடி போர்க்களத்துக்கே போயிருக்கிறாள் ஒரு தாய். மகனை மடியில் கிடத்தி அவள் அழுதபோது, அம்மா நான் பிழைக்க மாட்டேன். அதோ ஊமைத்துரை காயமுற்றுக் கிடக்கிறார். அந்தச் சாமியைக் காப்பாத்துமா என்று சொல்லிவிட்டு உயிர் துறந்து விடுகிறான். உடனே ஊமைத்துரையை தன் வீட்டிற்கே தூக்கிக்கொண்டுபோய், காயத்துக்கு சிகிச்சையளித்திருக்கிறாள் அந்தத் பெண்.
ஊமைத்துரை உயிரோடுதான் இருக்கிறான் என்று தெரிந்ததும் எட்டையபுரம் ஜமீன் படைகளும், ஆங்கிலேயப் படைகளும் அந்த ஊரில் வீடு வீடாகத் தேடுதல் வேட்டை நடத்தியிருக்கின்றன. அப்போது அந்தப் பெண் தன் வீட்டு வாசலில் வேப்பிலையைத் தோரணமாகக் கட்டிவைத்துவிட்டு, அழுதிருக்கிறாள். அம்மை நோயால் அவளது மகன் இறந்துவிட்டான் போல, உள்ளே போனால் நமக்கும் நோய்த்தொற்று ஏற்படும் என்று படைவீரர்கள் பயந்து திரும்பிப்போய்விட்டார்கள். இது வெறுமனே வழக்காறு அல்ல; வரலாறு. கால்டுவெல் கூட தனது 'ஹிஸ்டரி ஆப் திருநெல்வேலி' புத்தகத்தில் இதனைப் பதிவு செய்திருக்கிறார்" என்றார்.
ஆனாலும், மஞ்சளும், வேப்பிலையும் கரோனா வைரஸை அழிக்கவல்லதா என்பதை மருத்துவர்கள்தான் சொல்ல வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT