Published : 31 Mar 2020 10:04 PM
Last Updated : 31 Mar 2020 10:04 PM

குடிநோயில் இருந்து மீள கரோனா ஊரடங்கைப் பயன்படுத்தலாம்: மனநல மருத்துவரின் ஆலோசனை

மதுரை 

கேரளாவில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் அங்கு குடிநோயாளிகள் தற்கொலை செய்துகொள்ள ஆரம்பித்துள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையில் ஊரடங்கு நாட்களை குடிநோயாளிகள் எப்படி சாதகமாக மாற்றி நோயில் இருந்து மீள முயற்சிக்கலாம் என ஆலோசனை கூறுகிறார் அரசு மனநல மருத்துவர் காட்சன்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதனால், தற்போது குடிநோயாளிகள் குடிக்க முடியாமலும், வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும் மன அழுத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

கேரளாவில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் அங்கு குடிநோயாளிகள் தற்கொலை செய்துகொள்ள ஆரம்பித்தனர்.

அதுபோன்ற நிலை தமிழகத்தில் வராமல் இருக்க வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் குடிநோயாளிகள் இந்த ஊரடங்கு காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மனநலத்துறை உதவிப்பேராசிரியர் ஆ.காட்சன் கூறியதாவது:

குடிபோதைக்கு அடிமையானவர்கள், தற்போதுள்ள சூழலில் மது கிடைக்காத பட்சத்தில் தூக்கமின்மை, கை, கால் நடுக்கம், பதட்ட உணர்வு, அதிகமாக வியர்த்துக் கொட்டுதல், இதய துடிப்பு அதிகரித்தல் போன்ற மிதமான பிரச்சனைகளில் இருந்து தீவிர மன குழப்பம் வரை ஆக வாய்ப்புள்ளது.

இந்த தீவிர மனக்குழப்பத்தில் யாரோ மிரட்டுவது போலவும், வீட்டைச் சுற்றி எதிரிகள் தாக்க தயாராக இருப்பது போலவும் மனப் பிறழ்வோ, மாய குரல்கள் கேட்பது போன்றோ இருக்கும். சிலருக்கு, மனித அல்லது விலங்குகள் உருவங்கள் கண்ணுக்கு தெரிவது போல இருக்கும்.

இதை (Alcohal withdrawal syndrome) மது விடுப்பட்ட நிலையில் ஏற்படும் பாதிப்பு என்று மனநலத்துறையில் சொல்வார்கள். இந்த நிலையில் உள்ளவர்கள் பெரும்பாலும் அதிகமான பதட்ட உணர்வுடன் காணப்படுவார்கள். அவ்வப்போது குடிப்பவர்களுக்கு இந்த நிலை வராது. குறைந்தப்பட்சம் வாரத்திற்கு 4 நாட்களுக்கு மேலே அல்லது அதிகளவில் தொடர்ச்சியாக மது அருந்துபவர்களுக்கு இந்த நிலை ஏற்படும்.

குடிப்பழக்கத்தால் ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது மேற்கூறிய அறிகுறிகள் தீவிரமாக வாய்ப்புள்ளது. தினசரி பகல், இரவு பராமல் குடித்து பழக்கிறவர்களுக்கு திடீரென்று மது கிடைக்காத இந்த நேரத்தில் வலிப்பு அறிகுறிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மருத்துவர் காட்சன்

மிதமான தொந்தரவு உள்ளவர்கள், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு குடிநீர், பழரசங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிட வேண்டும். பழ ரசங்கள், பழங்கள் வாங்கி சாப்பிட முடியாதவர்கள், சோறு வடித்த கஞ்சி, எலுமிச்சை பழச்சாறு மற்றும் சாதாரண குடிநீரை சாப்பிட்டு நாவு வறட்சி ஏற்பாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். லேசான மிதமான பாதிப்புள்ளவர்கள், பாதிப்புகள் 5 முதல் 7 நாட்களுக்குள் படிப்படியாக குறைந்து சகஜ நிலையை அடைவார்கள். இவர்களுக்கு பெரியளவில் மனகுழப்பங்களும், வலிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

ஒரு சிலருக்கு தூக்கமின்மை தொடர் பிரச்சனையாக இருக்க வாய்ப்புள்ளது. பகல், இரவு பாராமல் குடித்துப்பழகியவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், குடிப்பழக்கத்தால் உடல் மெலிந்து காணப்படுகிறவர்கள் மற்றும் ஏற்கெவே மனக்குழப்பமோ, வலிப்போ ஏற்பட்டவர்கள், தொடர் தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக தங்கள் குடும்ப மருத்துவர், மனநல மருத்துவரை தொலைபேசியில் அனுகி ஆலோசனை பெற வேண்டும்.

குறைந்தப்பட்சம் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு ஆல்ஹால் நச்சு நீக்கம் சிகிச்சைக்குரிய மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் எந்த வித பின்விளைவுகள் இல்லாமல் இந்த சூழலை எளிதாக கடந்து செல்லலாம்.

குடிப்பழக்கம் உள்ளவர்கள், thiamine என்ற வைட்டமின் மாத்திரைகளை வாங்கிக் கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இதற்கு மருத்துவ சீட்டு தேவையில்லை. இதை உடனே தொடர்ந்து எடுப்பது மூலம் இந்த பிரச்சனையின் தீவிரத் தன்மையை குறைக்கலாம்.

மது கிடைக்காத இந்த சூழலை சாதகமாக்கிக் கொண்டு மதுவில் இருந்து விடுபட முயற்ச்சிக்கலாம். பெரும்பாலான போதை மறுவாழ்வு மையங்கள் 21 நாட்கள் தான் முதற்கட்ட சிகிச்சையை அளிக்கின்றன. அந்த வகையில் தானாகக் கிடைத்த இந்த ஊரடங்கு காலத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால் இழந்த ஆரோக்கியம், அந்தஸ்து, சமூக, பொருளாதார நிலை என எல்லாவற்றையும் மீட்டெடுக்கலாம் என மருத்துவர் கூறுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x