Published : 31 Mar 2020 08:22 PM
Last Updated : 31 Mar 2020 08:22 PM
ஊரடங்கால் தமிழகத்தில் 6 லட்சம் ஆட்டோ தொழிலாளர்கள் வேலையிழந்துள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம்(சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.சிவாஜி கூறியதாவது, கரோனா முன்னெச்சரிக்கை ஊரடங்கால் தமிழகத்தில் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 2,85,000 ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோ ஓட்டுநர்கள், டிங்கர், லயனர், பெயிண்டர், டாப் அடிப்பவர், பழுது நீக்குவோர் என சுமார் 6 லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்கள் உள்ளனர்.
ஆட்டோ தொழிலாளர்கள் பணத்தை சேமித்து வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள் இல்லை. அன்றாடம் உழைத்துதான் ஆட்டோவிற்குறிய தவணை, வாரச் சீட்டுக்கு வாங்கிய தவணை செலுத்துவதோடு, தங்கள் குடும்ப செலவுகளையும் செய்து வருகின்றனர்.
இவர்களால் 21 நாள் ஊரடங்கை அரசு உதவி செய்தால் மட்டுமே சமாளிக்க முடியும் தமிழக அரசு நலவாரியத்தில் உள்ளவர்களுக்கு ரூ. 1,000 அறிவித்துள்ளது. நலவாரியத்தில் பெரும்பாலான ஆட்டோ தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இல்லை.
அதனால் அனைத்து ஆட்டோ தொழிலாளர்களும் இந்த தொகையை பெற முடியாது. எனவே வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் கணக்கெடுத்து அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். இத்தொகையால் அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியாது.
எனவே அரசு ரூ.15,000 நிவாரணமாக வழங்க வேண்டும். தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன் தொகையை செலுத்தும் காலத்தை 3 மாதங்கள் நீடிக்க வேண்டும். அரசு ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment