Published : 31 Mar 2020 06:59 PM
Last Updated : 31 Mar 2020 06:59 PM

நீங்கள் எதிர்க்கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறீர்களோ இல்லையோ, எங்கள் பங்களிப்பை எப்போதும் செய்வோம்: முதல்வருக்கு ஸ்டாலின் பதில்

திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்க்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று வைத்த கோரிக்கையை முதல்வர் நிராகரித்தார். இதற்கு பதிலளித்துள்ள ஸ்டாலின், நீங்கள் அதற்கு முயற்சிக்கிறீர்களோ இல்லையோ நாங்கள் எப்போதும் மக்கள் நலனை விரும்புவோம் என்று தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பலதரப்பட்ட கருத்துகளுடன், ஒளிவு மறைவின்றி வெளிப்படைத் தன்மையுடன், பல்வேறு பரிமாணங்களையும் ஆராய்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கையை முதல்வர் பழனிசாமி மறுத்தார். இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில், “எதிர்க்கட்சிகளைக் கொண்டு கூட்டம் நடத்த இதில் ஒன்றும் கிடையாது. நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்த உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். நோய்த் தொற்று இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். இதெல்லாம் மருத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள். இதில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டவோ அரசியல் செய்யவோ அவசியமில்லை” என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்,

'எதிர்க்கட்சிகள்' என அலட்சியத்துடன் ஒதுக்காமல், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு வருமாறு:

“அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் நோக்கம், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தமிழக மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே ஆகும். @CMOTamilNadu அரசு இதற்கு விழைகிறதோ இல்லையோ, நாங்கள் தொடர்ந்து மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் பங்களிப்பையும் முழு ஆதரவையும் வழங்குவோம்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x