Published : 31 Mar 2020 06:45 PM
Last Updated : 31 Mar 2020 06:45 PM
விடுதிகளை மூடி பெண்களை வெளியே அனுப்பி அவர்கள் பாதிக்கப்படக்கூடிய நிலையை ஏற்படுத்துவது / நோய்த்தொற்று பாதிப்பை உருவாக்கும் வண்ணம் செயல்படும் விடுதி நிர்வாகங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் (ஐஏஎஸ் ஓய்வு) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
''தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்வதில் மகளிர், ஆணையம் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தற்போதுள்ள சூழலில், தொற்றுநோயைச் சமாளிப்பதற்கான உங்கள் இடைவிடாத மற்றும் அயராத முயற்சிகளுக்கு உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.
நாட்டில் தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவின் விளைவாக, மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு மகளிர் ஆணையம் அறிகிறது. இச்சூழலில், சில ஜவுளி, ஆடை மற்றும் பிற தொழில்கள் பல மாவட்டங்களில் மூடப்பட்டு அல்லது ஓரளவு செயல்பட்டு வருகின்றன.
விடுதிகளை மூடி, குடியிருப்பாளர்களை - சிறுமிகளையும் பெண்களையும் வெளியே அனுப்புவது குறித்து ஒரு சில புகார்கள் மகளிர் ஆணையத்திற்கு வந்துள்ளன. போக்குவரத்து வசதி மற்றும் உணவு இல்லாமல் அவர்கள் தவித்து வருவதாக புகார்கள் வந்துள்ளன. மேலும், குடியேற்றங்களில் தங்கியுள்ள புலம்பெயர்ந்த பெண்கள் அதிக பாதிப்புக்குள்ளாகி, பல மாவட்டங்களில் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கும் உணவுக்கும் கஷ்டப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன.
பெண் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், இந்த தொற்றுநோயால் பாதிக்கப்படுவதைக் குறைப்பதும் மிகவும் அவசியம்.
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு,
• அனைத்து மில் நிர்வாகங்களுக்கும் அவர்களின் விடுதிகளை செயல்பட வைக்க அறிவுறுத்துங்கள் மற்றும் இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்யுங்கள்.
• விடுதிகளை மூடி பெண்களை வெளியே அனுப்பி அவர்கள் பாதிக்கப்படக்கூடிய நிலையை ஏற்படுத்துவது / நோய்த்தொற்று பாதிப்பை உருவாக்கும் வண்ணம் செயல்படும் விடுதி நிர்வாகங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• விடுதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் குடியிருப்புகளுக்குள் நோய் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• இச்சூழலில், விடுதிகளையும், புலம்பெயர்ந்தோர் குடியேற்றங்களையும் கண்காணிப்பதற்காக முன்னணி சிவில் சமூக அமைப்புகளின் / தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள் உட்பட மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துக் கண்காணித்தல் வேண்டும்.
• புலம்பெயர்ந்த குடும்பங்கள் குறிப்பாக பெண்கள் அரிசி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் / உணவு மற்றும் சுகாதாரச் சேவைகளை ஊரடங்கு காலத்தில் பெறுவதை உறுதி செய்யுங்கள்.
இது தொடர்பாக நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் நிச்சயமாக ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை மகளிர் ஆணையத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்''.
இவ்வாறு முனைவர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT