Published : 17 Aug 2015 10:26 AM
Last Updated : 17 Aug 2015 10:26 AM
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஆலவிளாம்பட்டி கிராமத் தினர், பல தலைமுறைகளாக மதுவிலக்குக் கொள்கையை கடைபிடித்து வருகின்றனர். வேலைக்காக வெளியூர், வெளி நாடு சென்றாலும் இந்த ஊர் இளைஞர்கள் கட்டுப்பாட்டை மீறாமல் கண்ணியத்துடன் இருந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் மது விலக்கை அமல்படுத்தக் கோரி அரசியல் கட்சியினர், பல்வேறு சமூக அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல தலைமுறைகளாக..
இதற்கிடையே சிவகங்கை மாவட்டத்தில், திருப்பத்தூர் சாலையில் மதகுபட்டியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஆலவிளாம்பட்டி கிராமத்தினர் பல தலைமுறைகளாக மதுவிலக்கு கொள்கையை தீவிரமாக கடை பிடித்து வருகின்றனர்.
விவசாயத்தையே தொழிலாகக் கொண்டுள்ள இக்கிராமத்தினர் தெய்வ வாக்காகவும், ஊர்க் கட்டுப்பாடாகவும் மதுவிலக்கு கொள்கையை கடைபிடிக்கின்றனர். படித்த இளைஞர்கள் வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்றாலும் மது அருந்தாமல் வாழ்ந்து வருகின் றனர்.
இதுகுறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த டிப்ளமோ சிவில் படித் துள்ள நவநீதகிருஷ்ணன் கூறியது:
ஒருவர் குடிநோயாளி ஆகி விட்டால், அவரது குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடுகிறது. மதுவால் பல குடும்பங்கள் அழிந்து, நாடே சீரழிந்துகொண்டிருப்பதை நன்கு உணர்ந்துள்ளோம். எங்கள் ஊர் கட்டுப்பாட்டை மீறாமல் மதுவின் பிடியில் சிக்காமல் இருந்து வருகிறோம். எங்கள் ஊரில் உள்ள கடைகளில் எந்தவொரு போதைப் பொருளையும் விற்பதில்லை. பெரும்பாலான இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடு சென்றா லும், அங்கும் மது அருந்தாமல் ஊர்க்கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு மாணவர் வைரமுத்து கூறும்போது, ‘‘எங்கள் ஊரில் பெரும் பாலான இளைஞர்கள் ஓட்டுநர் களாக உள்ளனர். கவனத்துடனும், விழிப்போடும் இருக்கவேண்டிய ஓட்டுநர் பணியில் கட்டுப்பாடாகவும், ஒழுக்கத்துடனும் உள்ளனர். எங்கள் ஊரில் இதுவரை எந்த அசம்பாவிதமும் நடந்ததில்லை. சுற்றுவட்டாரத்தில் எங்கள் கிராமத்துக்கு நல்ல பெயர் உள்ளது. பல மாவட்ட ஆட்சியர்கள், பொதுநல அமைப்பினர் எங்களது கிராமத்தை பாராட்டி உள்ளனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT