Published : 31 Mar 2020 02:17 PM
Last Updated : 31 Mar 2020 02:17 PM
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள முறைசாரா தொழிலாளர்களின் நிவாரணத்துக்கு ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் உள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் உரிமை கோரா நிதியை பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர் சம்மேளனம் மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர் சம்மேளனத்தின் மாநில செயலர் தலைவர் டி.திருமலைச்சாமி, மத்திய நிதி அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முறைசாரா தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் இயல்பு நிலை திரும்பும் வரை போதுமானதாக இல்லை.
நிரந்தர வேலையில் இருந்து மாதச் சம்பளம் பெறுவோர் அவர்களின் வருங்கால வைப்பு நிதியில் 75 சதவீத பணத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் எதிர்கால கனவு, ஓய்வுக்கு பிந்திய பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
ஊரடங்கால் நிரந்தர பணியிலுள்ள அரசு ஊழியர்களே தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியாத சூழல் இருக்கும் போது அமைப்புசாரா தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.
வருங்கால வைப்பு நிதியம் மற்றும் ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் பல ஆண்டுகளாக உள்ளது.
இப்பணத்தில் சில ஆயிரம் கோடி ரூபாயை இயல்பு நிலை திரும்பும் வரை முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள், சம்பள இழப்பு ஏற்பட்டுள்ளவர்களின் நிவாரணத்துக்கு பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT