Published : 31 Mar 2020 02:15 PM
Last Updated : 31 Mar 2020 02:15 PM
வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், கரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் ‘ஹவுஸ் குவாரன்டைன்’ எனும் பெயரில் தமிழகமெங்கும் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். கோவையில் மட்டும் அப்படி 4,483 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவ்வீடுகளின் முன்புறம், அதற்கான ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருக்கிறது. எனினும், தனிமைப்படுத்தப்பவர்களில் பலர், போதிய ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்பதால், சுகாதாரத் துறையினரும், பொதுமக்களும் அன்றாடம் அவஸ்தைக்குள்ளாக வேண்டியிருக்கிறது.
அலட்சியப் போக்கு
உதாரணமாக, சில நாட்களுக்கு முன் கோவை மதுக்கரையில் ஓர் இளைஞருக்குக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. விசாரித்ததில் அவர் போன மாதம் துபாயிலிருந்து கொச்சின் வந்திறங்கி, அங்கே உள்ள ஒரு வீட்டில் தங்கி தன் நண்பர்களுக்கு இரண்டு நாட்கள் பார்ட்டி வைத்துவிட்டு, தரை மார்க்கமாகக் கோவை வந்தது தெரியவந்தது. அவருக்குக் கொச்சினில் மட்டுமல்ல, பி.கே.புதூர் பகுதியிலும் சொந்த வீடு உள்ளது.
அங்கே ஒரு வார காலம் தன் நண்பர்களுடன் தங்கியதுடன், பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்திருக்கிறார். அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கரையில் உள்ள நண்பர்கள் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறார். அங்கேதான் அந்த இளைஞருக்குக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனையில் சேர்ந்த பின்னர்தான், அவர் துபாயிலிருந்து வந்த விவரமும், பல இடங்களுக்குச் சென்று வந்த தகவலும் அதிகாரிகளுக்குத் தெரியவந்திருக்கிறது. துபாயிலிருந்து கொச்சின் வந்திறங்கியதால் கோவை விமான நிலையத்துக்கு வந்த பயணிகளின் பட்டியலில் அவர் பெயர் இல்லை. இதற்கிடையே, அவரது பாஸ்போர்ட் முகவரி கோவை பி.கே.புதூர் என்றிருந்ததால் ஏற்கெனவே அங்கே ‘ஹவுஸ் குவாரன்டைன்’ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர் பின்னர், கோவை இ.எஸ்.ஐ கரோனா மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதற்குப் பிறகு அவர் பற்றிய விவரம் தெரியவில்லை. ஆனால், தகவல் அறிந்த மதுக்கரை மக்கள் உஷராகிவிட்டனர். ஹாஸ்டலில் தங்காமல் வீடெடுத்து தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுடன் வருபவர்கள் யார், தங்குபவர்கள் யார் என்பதைக் கண்காணித்து விரட்ட ஆரம்பித்துவிட்டனர். உள்ளூர் இளைஞர்கள், பெரியவர்கள் கூடி, ஊருக்குள் புதியவர்கள் யார் வந்தாலும் கண்காணித்து போலீஸிற்குத் தகவல் சொல்வது என்று முடிவு செய்துள்ளனர்.
அதேபோல் மதுக்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமலையம் பாளையத்தில் ஒரு பெண், வெளிநாட்டிலிருந்து வந்ததால் ‘ஹவுஸ் குவாரன்டை’னில் வைக்கப்பட்டிருக்கிறார். வீட்டில் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பெண்ணோ வெளியே வீதியில் நடமாடுவது, கடைக்குப் போவது என இருந்திருக்கிறார். அதைப் பார்த்து கடுப்பான பொதுமக்கள், “நீங்கள் வெளியே வரக் கூடாது” என சொல்லிப் பார்த்திருக்கின்றனர். அவர் கேட்கவில்லை.
எனவே, சுகாதாரத் துறையினருக்குத் தகவல் கொடுத்துவிட்டனர். தொடர்ந்து போலீஸ் சகிதம் வந்த சுகாதாரத் துறையினர் அந்தப் பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் அழைத்து, “நீங்கள் யாரும் கேட்டிற்கு வெளியே வரக் கூடாது, இல்லையென்றால் கரோனா மையத்தில் கொண்டுபோய் வைக்க வேண்டிவரும்” என எச்சரிக்கை செய்துள்ளனர்.
மன உளைச்சல்
தனிமைப்படுத்தப்படுதலின் அடிப்படை அம்சத்தைப் புரிந்துகொள்ளாமல் இப்படி சிலர் நடந்துகொள்கிறார்கள் என்றால், சுகாதாரத் துறையினர் எடுக்கும் தொடர் நடவடிக்கைகளால் ஹவுஸ் குவாரன்டைனில் உள்ளவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதும் நடக்கிறது.
கோவை நகர மையப் பகுதி ஒன்றில் வசிக்கும் ஒருவர், வெளிநாட்டிலிருந்து வந்தவர் எனும் அடிப்படையில் ஹவுஸ் குவாரன்டைனில் வைக்கப்பட்டிருக்கிறார். அவரது வீட்டிற்கு தினம்தோறும் சுகாதாரத் துறையினர் கூட்டம் கூட்டமாகச் செல்வது, மருந்தடிப்பது, சுற்றுப்புற மக்களிடம் விசாரிப்பது என்றிருந்திருக்கின்றனர்.
அக்கம்பக்கத்தினரும், அவரது வீட்டைத் தொடர்ந்து கண்காணிப்பது, அந்த நபர் தன் வீட்டின் கதவைத் திறந்தால் தங்கள் வீ்ட்டுக் கதவை படாரென மூடிக்கொள்வது, அவர் வாசலுக்கு வந்துவிட்டு உள்ளே போனால் உடனே மஞ்சள், வேப்பிலைக் கரைசலைத் தங்கள் வீடுகள் முன் தெளிப்பது என்றே இருந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் அந்த வீடு கரோனாக்காரர் வீடு என்று பேரே ஆகிவிட்டது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர், சுகாதாரத் துறை அதிகாரிக்கே போன் செய்து, “ஐயா, முதலில் உங்க ஊழியர்களை என் வீட்டுக்கு வர வேணாம்னு சொல்லுங்க. நான் எப்படி பாதுகாப்பாக இருக்கணுமோ அப்படி இருந்துக்குவேன். இங்கே டார்ச்சர் தாங்கலை. என்னை இங்கே எல்லோரும் எமனைப் பார்க்கிற மாதிரியே பார்க்கிறாங்க” என்று குமுறிவிட்டாராம்.
இருக்கும் இடத்தைவிட்டு…
கோவை புதூர் பகுதியில் ஒரு வீட்டில் சில நாட்கள் முன்பு ஒரு வீட்டில் ஹவுஸ் குவாரன்டைன் ஸ்டிக்கர் ஒருவர் பெயர் போட்டு ஒட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர். ‘அந்த நபர் வெளிநாட்டில் அல்லவா இருக்கிறார். இன்னமும் வரவில்லையே. எதற்கு ஒட்டுகிறார்கள்?’ என்று விசாரித்த பின்புதான், ‘வெளிநாடு சென்ற அந்த நபர் கோவைக்கு வந்து 10 நாட்கள் ஆகிவிட்டன. அவர் கணபதி பகுதியில் ஒரு வீடு எடுத்து தங்கியிருக்க, அவரின் பாஸ்போர்ட் முகவரியான இங்கே ஸ்டிக்கரை ஒட்டிச் சென்றிருக்கிறார்கள்’ என்று தெரியவந்திருக்கிறது. இதுவரை ஹவுஸ் குவாரன்டைனில் வைக்கப்பட்டவர்களில் பாதிப் பேராவது அங்கேயே இருக்கிறார்களா என்பது சந்தேகம்தான் என்று சுகாதாரத் துறை அலுவலர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.
“வெளிநாட்டிலிருந்து வருபவர்களைப் பொறுத்தவரை அவர்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரிக்குச் சென்று ஸ்டிக்கர் ஒட்டுகிறோம். அப்போதைக்கு அந்த வீட்டுக்காரர்களும் ஒத்துழைக்கிறார்கள். மற்றபடி அவர்கள் அங்கேயே வசிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. அவர்கள் ஏதாவது ஒரு வீட்டில் பாதுகாப்பாக இருந்தால் சரி. அதை நாங்கள் கண்காணித்தே வருகிறோம்” என்று சுகாதாரத் துறை அலுவலர்கள் விளக்கமளிக்கிறார்கள்.
அடையாளம் காண்பதில் சிரமம்
மேலும், “கோவையில் உள்ள கல்லூரிகளில் பயிலும் வெளியூர் மாணவர்களில் பலர், தனித்தனியாக வீடு எடுத்துத் தங்கியுள்ளார்கள். கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அவர்கள் தத்தமது வீடுகளுக்குப் போகாமல் இங்கேயே தங்கியிருக்கிறார்கள். அவர்களின் வெளிநாட்டு நண்பர்கள் நேராக அவர்கள் வீடுகளுக்குத்தான் போகிறார்கள். அங்கே தங்கியிருப்பவர்களை இனம் காணவே முடியவில்லை. இதுதான் எங்களுக்கு இப்போது சவாலான விஷயம். ஆனால் இப்போது மக்களிடையே விழிப்புணர்வு வந்துவிட்டது.
இப்படியொரு ஸ்டிக்கர் ஒட்டிவிட்டாலே அவர்கள் அந்த வீட்டைக் கண்காணிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த வீட்டில் உள்ளவர்களின் நடமாட்டம் குறித்து எங்களுக்குச் சொல்லிவிடுகிறார்கள் அல்லது அவர்களே நேரடியாகச் சென்று அவர்களை எச்சரித்துவிடுகிறார்கள். இது எங்களுக்கு உதவிகரமாக இருக்கிறது” என்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
அதிகரித்துவரும் எண்ணிக்கை
இவர்களைத் தவிர கோவையில் பணிபுரிந்த ஈரோட்டைச் சேர்ந்த பெண் டாக்டர், தாய்லாந்திலிருந்து கரோனா வைரஸ் தொற்றுடன் வந்த ஒருவருக்குத் தொட்டு சிகிச்சை அளித்திருக்கிறார். பின்னர் அந்த நபர் போத்தனூர் ரயில்வே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அதன் பிறகு டாக்டருக்குக் காய்ச்சல் வர, அவர் உஷராகி, கரோனா வைரஸ் பரிசோதனை எடுத்துக்கொண்டார். அது பாஸிட்டிவ் என வந்திருக்கிறது.
அவர் கணவர், மகள், பேத்தி ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பதற்றமடைந்த சுகாதாரத் துறையினர், அந்த டாக்டரிடம் சிகிச்சை பெற்றவர்கள், அவருடன் கார், பேருந்தில் உடன் பயணித்தவர்கள் என 50-க்கும் மேற்பட்டோரைக் கண்காணிப்பு வளையத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஹவுஸ் குவாரன்டைனிலும் அவர்களை வைத்திருக்கின்றனர்.
கோவைக்குக் கடந்த ஜனவரி 14 முதல் மார்ச் 28 வரை விமானப் பயணம் செய்தவர்கள் சுமார் 12 ஆயிரம் பேர். அதில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களின் எண்ணிக்கை 1,114. இது தவிர பெங்களூரு, டெல்லி, மும்பை, என வெவ்வேறு விமான நிலையங்களில் இறங்கி காரில், பேருந்தில், ரயிலில் என வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் நிறைய.
இப்படி இதுவரை கோவையில் மட்டும் 4,483 பேர் ஹவுஸ் குவாரன்டைன் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறார்கள். அவர்களில் தீவிரக் கண்காணிப்பில் உள்ளவர்கள் 214 பேர். தீவிர காய்ச்சல், சளி கண்டு ‘கரோனா’ சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 178 பேர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில், கோவையில் ‘கோவிட் -19’ குழப்பங்கள் தொடர்கதையாகியிருக்கின்றன. இதெல்லாம் எப்போது முடிவுக்கு வரும் என்று கோவைவாசிகள் காத்திருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT