Published : 31 Mar 2020 02:01 PM
Last Updated : 31 Mar 2020 02:01 PM
கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவுவதற்காக நிவாரணத் தொகை அளிக்கலாம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்ததைத் தொடர்ந்து, 4 ஆண்டுகளாக தான் சேமித்து வைத்த கல்வி உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தை அரசுப் பள்ளி மாணவர் அளித்துள்ளார்.
கரோனா வைரஸ் தடுப்புக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதியில் இருந்து 'கோவிட்-19 நிவாரண நிதி புதுச்சேரி' என்ற பெயரில் தனிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
"மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், பெரிய தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டோர் கரோனா தொற்று தடுப்புக்கு நிதி தர வேண்டும். புதுச்சேரி எம்எல்ஏக்களும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 30 சதவீதத்தை வழங்க வேண்டும்" என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், பல்வேறு எம்எல்ஏக்களும், எம்.பி.க்களும் தங்களின் ஒரு மாத ஊதியத்தையும், எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் 30 சதவீதத்தையும் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர் கிஷோர், கடந்த நான்கு ஆண்டுகளாக தான் சேமித்து வைத்த கல்வி உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தை புதுச்சேரி முதல்வரின் கரோனா வைரஸ் தடுப்பு நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
அதற்காக அந்த மாணவர் இன்று (மார்ச் 31) சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அறையில், முதல்வர் நாராயணசாமியிடம் அளித்தார். அப்போது மாணவரின் தந்தை செந்தாமரைக்கண்ணன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் அமலன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுபற்றி மாணவர் கிஷோர் கூறும்போது, "கரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கனோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் இறந்துள்ளனர். குறிப்பாக இத்தாலியில் ஏராளமானோர் இறந்த நிலையில், அவர்களை எரிக்கக்கூட முடியவில்லை என்றெல்லாம் படித்தேன்.
இதனால் மனம் மிகுந்த கவலையடைந்தது. இதுபோன்ற நிலை நம் நாட்டில் வரக்கூடாது என்று நினைத்து கடந்த நான்கு ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த கல்வி உதவித்தொகை ரூ.2,000 பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு நான் கொடுத்தேன்" என்று தெரிவித்தார்.
புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சேர்ந்த டேட்டா என்ட்ரி ஆபரேட்டரான செந்தாமரைக்கண்ணன்-மகேஸ்வரி தம்பதியின் மகன் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT