Published : 31 Mar 2020 12:55 PM
Last Updated : 31 Mar 2020 12:55 PM
பலசரக்குக் கடைகளில் சரக்குகள் தீர்ந்துபோனதால், அரிசி ஆலைகளிலும், மாவு மில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள அ.புதூர் கிராமத்தில் எப்போதும் காற்றாடுகிற, பழமையான அரிசி மற்றும் மாவு ஆலை உள்ளது. தினமும் ஐந்தாறு பேர் வந்தாலே அதிசயம். இன்று காலையில் அரிசி மாவு திரிப்பதற்காக அங்கே போயிருந்தேன். பொங்கல், தீபாவளியில் கூடப் பார்த்திராத கூட்டம்.
"தம்பி அரிசியை வெச்சிட்டு சாயந்திரமா வாங்க" என்றார்கள். "என்னது சாயந்திரமா?" என்றேன். "ஆமாம்பா. மெஷின் சூடாகிட்டா, மாவு ஒட்டிக்கும். அதனால, நிறுத்தி நிறுத்திதான் ஓட்டுறோம்" என்றார் சீசனுக்கு வேலைக்குச் சேர்ந்திருக்கும் புதிய ஊழியர்.
"உள்ள வந்து எடை பார்த்திட்டுப் போயிடுறேனே?" என்றேன். "வெளிய வாளியில தண்ணீ இருக்கு. சோப்புப்
போட்டு கை, கால கழுவிட்டு உள்ள வாங்க" என்றார்கள். போனேன். முதன்முறையாக எல்லா இயந்திரங்களும் ஏககாலத்தில் ஓடிக்கொண்டிருந்தன. அத்தனை பேரும் முகக் கவசம் போட்டிருந்தார்கள். உள்ளே நுழைந்ததும் வத்தல்பொடி நெடியில், தும்மல் வந்தது.
முகத்தில் துணி கட்டியிருந்தாலும், ஆமை போல என் டீசர்ட் ஓட்டைக்குள்ளேயே தலையை நுழைத்து வெளியே வராமல் தும்மினேன். ஏதோ குண்டு வெடித்ததுபோல, மில்லுக்குள் இருந்த அத்தனை பேரும் சுவரோடு சுவராக பல்லியைப் போல ஒட்டிக்கொண்டார்கள். அவ்வளவு நேரமும் இவனை எதுக்கு உள்ளவிட்டீங்க என்பதுபோல பார்த்தவர்கள் எல்லாம், திடீர் பாசம் பொங்க, "முதல்ல இந்தத் தம்பிக்கு அரைச்சி குடுங்கம்மா" என்று சிபாரிசு செய்தார்கள்.
"புரியுது புரியுது. ஒரே ஒரு நிமிஷம். ஓனர்கிட்ட பேசிட்டுப் போயிடுறேன்" என்று, மில் உரிமையாளர் ருக்மணி அக்காவைப் பேட்டி கண்டேன்.
"பலசரக்குக் கடைகள்ல பூராம் அரிசி, கோதுமை, கேப்பைன்னு எல்லா மாவுப் பாக்கெட்டும் காலியாம் தம்பி. அதனாலதான் அம்புட்டுப் பேரும் மாவு மில்லுக்குப் படையெடுத்திருக்காங்க. ரேஷன் கடையில ரொம்ப நாளைக்கு முன்னாடி வாங்கிவெச்சி, புழுத்துப்போன கோதுமை, பச்சரிசியைக்கூட தூக்கிட்டு வந்திருக்காங்க. கடைகள்ல அரிசியும் தட்டுப்பாடாம்ல... அதாம் கூட்டம். சுத்துப்பட்டி கிராமங்கள்ல எல்லாம் வௌஞ்ச நெல்ல அப்படியே மதுரை நவீன அரிசி ஆலைகள்ல கொடுத்திட்டு, பிடிச்ச ரக அரிசி மூட்டையைத் தூக்கிட்டு வர்றதுதான் வழக்கம். இப்ப வேற வழியில்லாம சம்சாரிங்க பூராம் இங்கேயே நெல்லு குத்த ஆரம்பிச்சிட்டாங்க.
நம்மகிட்ட இருக்கிறது அந்தக்காலத்து மிஷின்ங்கிறதால நேரம் ஆகுது. முன்னாடி ஒரு நாளைக்குப் பத்துப் பேர் வந்தாலே அதிசயம். இப்ப நிமிஷத்துக்கு ஒரு ஆளு வர்றாங்க. மாவை ஆறவெக்க கிளறக்கூட இடமில்லாத அளவுக்குக் கூட்டம். ஒத்தக்கடை போலீஸ்காரங்க வந்து, ஒரே நேரத்துல மில்லுக்குள்ள ஆள விடாதீங்க. கை, கால் கழுவ சோப்பும் தண்ணியும் வைங்கன்னு சொன்னாங்க. அதை எல்லாம் கரெக்ட்டா செய்றோம்" என்றார் அக்கா.
"வண்டியும் ஓர் நாள் ஓடத்தில் ஏறும்... ஓடமும் ஓர் நாள் வண்டியில் ஏறும்"னு சும்மாவா சொன்னாங்க!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT