Published : 31 Mar 2020 08:01 AM
Last Updated : 31 Mar 2020 08:01 AM
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் முதல்கட்டமாக 674 பழைய ரயில் பெட்டிகள்அடுத்த ஒரு வாரத்தில் தனி வார்டுகளாக மாற்றப்படவுள்ளது. இதன்மூலம் குறைந்த செலவில் சுமார் 1,300 படுக்கைகள் அமைக்க முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பழமையான ரயில் பெட்டிகளை தேர்வுசெய்து, கரோனா வைரஸ் சிகிச்சைக்கான வார்டுகளாக மாற் றும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென ரயில்வே வாரியம்அனைத்து மண்டல பொதுமேலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, 20 ஆண்டுகள் பழமையான ரயில் பெட்டிகளை தேர்வு செய்து, முதன்மை கதவுக்கு அடுத்துள்ள அனைத்து தடுப்புகளையும் நீக்குதல், பெட்டிக்குள் அமைந்திருக்கக் கூடிய கழிவறைகளில் ஒன்றினை குளியலறையாக மாற்றுதல், கை கழுவுவதற்கான வசதி, பெட்டியில் உள்ள அனைத்து மைய படுக்கைகளையும் நீக்குதல், லேப்டாப், செல்போன்களை சார்ஜ் செய்வதற்கான வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தனி வார்டுகளாக அமைக்க வேண்டுமென ரயில்வே வாரியம் அறிவித்தது.
அதன்படி, முதல்முறையாக வடக்கு ரயில்வேயில் வெற்றிகரமாக ஒரு பெட்டி தயாரிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து ரயில்வே பணிமனைகளிலும் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒரே வாரத்தில் 674 பழைய பெட்டிகளில் குறைந்த செல வில், 1,300-க்கும் மேற்பட்ட படுக்கைகளை அமைக்கும் ரயில்வேயின் புதிய திட்டத்துக்கு பாராட்டு கிடைத்து வருகிறது.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும் ரயில்வேக்கு சொந்தமான மருத்துவமனைகளில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக 20 ஆண்டுகளை கடந்த பழைய ரயில் பெட்டிகளைத் தேர்வு செய்து, கரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தனி வார்டுகளாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 42 பணிமனைகளில் முதல்கட்டமாக அடுத்த ஒரு வாரத்தில் 674 பழைய பெட்டிகளை தேர்வு செய்து, தனி வார்டுகளாக மாற்றவுள்ளோம்.
ஒவ்வொரு பெட்டிக்கும் ரூ.1.5 லட்சம் செலவாகும். 7 வார்டுகளாக அமையும் ஒவ்வொரு பெட்டியிலும் தலா 2 படுக்கை வசதிகளை உருவாக்கி வருகிறோம். அந்தவகையில், அடுத்த ஒரு வாரம் முதல் 10 நாட்களில் 1,300 படுக்கைகள் கிடைக்கும். ரயில்வேயிடம் தற்போது 1,500 பழைய பெட்டிகளையும் அடுத்தடுத்து பயன்படுத்துவோம். இந்த பெட்டியை எங்கு வேண்டுமென்றாலும் எடுத்துச் செல்லலாம். அனைத்து அடிப்படை வசதிகளோடு இருப்பதால், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இணையாக மருத்துவ வசதியை பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT