Published : 31 Mar 2020 07:18 AM
Last Updated : 31 Mar 2020 07:18 AM
திருச்சி மாநகரில் 8 இடங்களில் காய்கறிகளை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் முகக்கவசம் அணியாத வர்களுக்கு அனுமதியில்லை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் காய் கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில், கீழப் புலிவார்டு ரோடு மதுரம் மைதானம், தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை, அண்ணா விளையாட்டு அரங்க முன்புற வளாகம், காவிரிப் பாலம், அரியமங்கலம் எஸ்ஐடி மைதானம், புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி மைதானம், சத்திரம் பேருந்து நிலைய சுற்று வட்டாரப் பகுதி, ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 8 இடங்களில் வியாபாரிகள் தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை விற்பனை செய்யலாம்.
இந்த 8 இடங்களிலும் வியாபாரிகள், விவசாயிகள் நேரடியாக காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து விற்பனை செய்ய அனுமதிக் கப்படும். இந்த இடங்களில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அறி விக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கே.கே. நகர் உழவர் சந்தையில் நேற்று காய் கறிகள் வாங்க வந்த மக்கள், நுழைவுவாயில் பகுதியில் கைகளை நன்கு கழுவிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதேபோல, சந்தைகள் நேற்று செயல்பட்ட காவிரிப் பாலம், உழவர் சந்தை, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்ததுடன், போதிய இடைவெளியைப் பின்பற்றினர்.
காந்தி மார்க்கெட் மூடல்
மொத்த, சில்லறை வியாபா ரிகள், தொழிலாளர்கள், பொது மக்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்ககவசம் அணியா தவர்கள் சந்தைப் பகுதியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மார்ச் 30-ம் தேதி(நேற்று) முதல் காந்தி மார்க்கெட் மறு உத்தரவு வரும் வரை முற்றிலும் மூடப்படுகிறது. இங்கு எந்த காய்கறி வாகனமும் அனுமதிக்கப்படாது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
மளிகை கடைக்கு எச்சரிக்கை
கரூர் பேருந்து நிலையம் மற்றும் திருவள்ளுவர் மைதானத்தில் காய்கறி விற்பனை கடைகளை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு, கைகளைக் கழுவ சோப்பு, தண்ணீர் வசதியு டன் வாஷ்பேஸின் அமைக்கவும், காய்கறிகளின் விலைப் பட்டியல் வைக்கவும் அமைச்சர் உத்தர விட்டார்.
கரூர் பேருந்து நிலையத்திலி ருந்து திருவள்ளுவர் மைதானம் செல்லும் வழியில் உள்ள தனியார் மொத்த மளிகை நிறுவனம் முன் ஏராளமானோர் கூட்டமாக நிற்பதைக் கண்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று அனைவரையும் கலைந்து போகுமாறு கூறினார். சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இப்படி கூட்டத்தை கூட்டினால் கடை மூடப்படும் என எச்சரித்துவிட்டு அமைச்சர் சென்றார்.
‘ஊரடங்கு மீறல் வழக்கை சந்திப்பேன்’
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோது, நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள தன் வீட்டின் முன்பு காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார், கூட்டம் கூட்டி காய்கறி விநியோகம் செய்தார். இதைத்தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை மீறியதாக போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இச்சூழலில் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க நேற்று வந்திருந்த ஜான்குமார் கூறியபோது, “வீடு, வீடாகச் சென்றுதான் காய்கறிகளைக் கொடுக்கத் திட்டமிட்டேன். ஆனால், காய்கறி வழங்குவதாக அறிந்த மக்கள் அதிகமாக கூடிவிட்டனர். அப்போதும் நான் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்திவிட்டே வழங்கினேன். இதற்காக என் மீது போடப்பட்டுள்ள வழக்கை சந்திப்பேன். மேலும் நெல்லித்தோப்பு, காமராஜ் நகர் ஆகிய இரு தொகுதிகளிலும் உள்ள ஏழை குடும்பத்தினருக்கு வீடுவீடாகச் சென்று அரிசி வழங்க உள்ளேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT