Published : 30 Mar 2020 07:15 PM
Last Updated : 30 Mar 2020 07:15 PM
சென்னையில் கரோனா தொற்றுள்ளவர்கள் வசித்த பகுதிகளில் சோதனை நடக்கிறதே தவிர சென்னையில் ரெட் அலர்ட் விடுக்கவில்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 67 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 3 பேர் சிகிச்சையில் குணமடைந்து சென்றுவிட்டனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.
67 பேரில் பலர் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள். சிலர் அவர்களது குடும்பத்தார். சிலர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இவர்கள் தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களில் கண்டறியப்பட்டவர்கள். இவர்கள் வசிக்கும் பகுதியில் 7 கி.மீ. சுற்றுக்கு வீடுகளை ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை முடிவு செய்தது.
சென்னையில் மட்டும் 15 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள 2,500 வீடுகளில் வசிக்கும் மக்களை 28 நாட்கள் கண்காணிக்க முடிவு செய்து அதற்கான பணியும் இன்று தொடங்கப்பட்டது.
சென்னையில் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளதாவது:
“பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 15 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று நோய் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி அண்ணாநகர் மண்டலத்திலுள்ள அரும்பாக்கம் மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் 5 நபர்களுக்கும், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த 5 நபர்களுக்கும், வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட போரூர் பகுதியில் 2 நபர்களுக்கும், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட சாந்தோம் பகுதி, அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட கோட்டூர்புரம் பகுதி, ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஆலந்தூர் பகுதியில் தலா ஒரு நபர் என மொத்தம் 15 நபர்களுக்கு வைரஸ் தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தப்பகுதிகளில் சோதனை நடக்கிறதே ஒழிய சென்னையில் சில பகுதிகளில் ரெட் அலர்ட் எதுவும் மாநகராட்சி விடுக்கவில்லை. பொதுமக்கள் தவறான தகவல்களை நம்பி பீதியடைய வேண்டாம்” .
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போன்று சென்னையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வீடுகளுக்கு டெலிவரி செய்யும் கடைகளின் பட்டியல் வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT