Published : 30 Mar 2020 06:14 PM
Last Updated : 30 Mar 2020 06:14 PM
அவசரத் தேவைக்காக வெளியூர் செல்ல அனுமதி வழங்கும் வசதியை காவல்துறை அறிமுகப்படுத்தியது. ஆனால், இத்திட்டத்தை பொதுமக்கள் தவறாகப் பயன்படுத்துவதாகவும், அவசியத் தேவைக்கு விண்ணப்பிப்பவர்கள் பாதிக்கப்படுவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் சென்னை காவல்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது சென்னையில் சிக்கியுள்ளவர்கள் மற்ற மாவட்டங்களுக்குச் செல்ல அவசியத் தேவை இருப்பின் விண்ணப்பித்து அனுமதி பாஸ் பெறலாம் என அறிவித்து அதற்கான வாட்ஸ் அப் எண், மெயில் ஐடியை வெளியிட்டது.
இதற்காக துணை ஆணையர் ஜெயலட்சுமி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனிக் கட்டுப்பாட்டு அறையும் தொடங்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட காவலர்கள் இந்தக் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வருகின்றனர். அவசரத் தேவைக்காக சென்னையை விட்டு வெளியூர் செல்வதற்காக 8,300 பேர் 2 நாளில் விண்ணப்பித்துள்ளனர். அதில் 115 பேருக்கு விசாரணை நடத்தி, நோய்த்தொற்று எதுவும் இல்லை என உறுதிப்படுத்திய பின் சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதில் விண்ணப்பிப்பவர்கள் அவசரத் தேவைக்காக குறிப்பாக திருமணம், நோய்வாய்ப்பட்ட உறவினர், கர்ப்பிணி மனைவி, ஆதரவற்ற நிலையில் உள்ள பெற்றோர் உள்ளிட்டோரைச் சந்திக்க முடியாமல் இருக்கும் நபர்கள், முக்கிய பணத்தேவை, தனியாக சென்னையில் வாடுவோர் போன்றோரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் விண்ணப்பங்களில் ராஜஸ்தான், பிஹாரிலிருந்து சென்னை வர அனுமதி கேட்டும், மற்ற மாவட்டங்களிலிருந்து சென்னக்கு வர அற்ப காரணங்களுக்காக அனுமதி கேட்டும் விண்ணப்பங்கள் அதிக அளவில் குவிந்துள்ளதால் போலீஸார் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேவையில்லாத காரணங்களுக்காக வெளியூர் செல்ல அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களால் உண்மையான தேவையுடையவர்களின் மனுக்களைப் பரிசீலித்து அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
துணை ஆணையர் ஜெயலட்சுமி கையெழுத்திட்டு அனுமதி பாஸ் வழங்கும் பணி 2 நாட்களாக நடந்து வருகிறது. இதில் வாட்ஸ் அப், மெயில் ஐடியில் விண்ணப்பித்தவர்களுக்கு உங்கள் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது என்கிற பதில் கூட இல்லாததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் குவிந்தனர்.
இதில் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுக்கு போலீஸார் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.
* தகுந்த வாகனத்தில் செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்தில் நெடுந்தூரம் பயணிப்பதற்கு அனுமதி மறுப்பு. நான்கு சக்கர வாகனத்தில் மட்டுமே முறையாகப் பதிவு செய்து அனுமதி.
* நெடுந்தூரப் பயணத்திற்கு இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சுமார் 100 கி.மீ. உள்ள பக்கத்து மாவட்டங்களுக்கு மட்டுமே இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி.
* விண்ணப்பிப்பவர்கள் வெளியூர் செல்ல அனுமதி கேட்டு பாஸ் பெறுவதற்கு விண்ணப்பிப்பவர்கள் எங்கிருந்து புறப்படுகிறோம், எங்கு செல்ல இருக்கிறோம் என்பதையும் தெளிவான தொடர்பு எண்களுடன் தெரிவிக்க வேண்டும்.
* திருமண நிகழ்ச்சிக்கு செல்ல விண்ணப்பிப்பவர்கள் திருமண அழைப்பிதழ் உள்ளிட்ட ஆவணங்களைச் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். அதிலும் அவசியமான நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே திருமணத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். அதிகபட்சமாக 7 பேர் திருமணத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். கார் அல்லது வேனில் மட்டுமே செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
* அனைவருக்கும் நோய்த் தொற்று இல்லை என்பதை பரிசோதித்த பின்னரே அனுமதி.
* நெருங்கிய ரத்த உறவில் யாரேனும் மரணமடைந்தால் மட்டுமே செல்வதற்கு அனுமதி. அதையும் அந்த ஊர் போலீஸார் சென்று விசாரணை நடத்தி உண்மையாகவே இறந்துள்ளார்களா? என்பதை உறுதி செய்த பின்னரே அனுமதி வழங்கப்படும்.
* அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் செல்வதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. மருத்துவ உதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் முறையான மருத்துவ ஆவணங்கள், எந்த மருத்துவர் சிகிச்சை அளிக்கிறாரோ அவருடைய தொடர்பு எண், யாருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்பது குறித்த முழுமையான விவரங்களோடு விண்ணப்பிக்க வேண்டும்.
அதை போலீஸார் அந்த மருத்துவருக்கு போன் செய்து அவசர மருத்துவ உதவி உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே அனுமதி வழங்கப்படும்.
* யார் உதவியும் இல்லாமல் தனிமையில் உள்ள முதியவர்கள், கர்ப்பிணிகள், மனைவி, தாய், சகோதரி உள்ளிட்டோரை பார்ப்பதற்கும் முறையான பரிசீலனைக்குப் பிறகு அனுமதி வழங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் உரிய காரணத்துடன் முழுமையான தகவல்களை வழங்கினால் மட்டுமே உடனடியாக பரிசீலனை செய்து அனுமதி வழங்க முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
நேரில் வருபவர்களுக்கும் உரிய ஆவணங்கள் வைத்திருந்தால் உடனடியாக பரிசீலனை செய்து தகவலை உறுதி செய்து அனுமதிச் சீட்டு வழங்குகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT