Published : 30 Mar 2020 04:40 PM
Last Updated : 30 Mar 2020 04:40 PM
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் அடுத்தடுத்து ஆறுபேர் இறந்திருப்பது குமரி மாவட்ட மக்களிடையே பதற்றத்தையும், அச்சத்தையும் உருவாக்கி வருகிறது. உயிரிழந்தவர்கள் ஏற்கெனவே பல்வேறு நோய்களால் பாதிக்கபட்டவர்கள் என்று மருத்துவர்கள் தரப்பில் விளக்கம் சொல்லப்பட்டாலும் குமரி மக்களிடையே கரோனா அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.
நாகர்கோவில் எம்எல்ஏ-வும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன், ''கரோனாவை முன்வைத்து நோயாளிகள் இறந்தபின் ஆய்வுக்கூடத்தில் இருந்து அறிக்கைவந்து என்ன பயன்? அவர்களுக்கு கரோனா தொற்று இல்லாவிட்டால் ஏன் அந்த வார்டில் அனுமதித்தனர்?'' என்பன உள்ளிட்ட பல கேள்விகளையும் எழுப்பியுள்ளார். இதனிடையே, பொதுமக்களிடம் கரோனா குறித்த அச்சத்தை போக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அதிகாரிகளோடு சேர்ந்து தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரமும் தொடர் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
குமரியில் கரோனா அச்சம் உச்சம் பெற்றிருப்பதற்கு கரோனாவை உறுதிசெய்யும் ஆய்வகம் இங்கு இல்லாததே காரணம். இந்நிலையில் அப்படியான ஆய்வகம் அமையுமா? குமரியில் கரோனா ஒழிப்புக்கு என்னவகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, தளவாய்சுந்தரம் 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்கு கொடுத்த பிரத்யேகப் பேட்டி.
''குமரியில் ஆய்வகம் அமைக்க ’நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி’ அமைப்பு அனுமதிகொடுக்க வேண்டும். கடந்த 2005-ல் அப்படியான முயற்சியில் அன்றைய அதிமுக அரசு இறங்கியது. அப்போது நான் அமைச்சராக இருந்ததால் அந்த முயற்சியில் தீவிரம் காட்டினோம்.
ஆனால் 2006-ல், ஆட்சிமாற்றம் ஏற்பட்டு அது கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இப்போது கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் நெல்லைக்குப் போய்தான் முடிவுகள் வருன்றன. இதைத் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அவரும் இதை உடனடியாக மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுவிட்டார். ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் விரைவிலேயே குமரியில் வைரஸ் கிருமியைக் கண்டறியும் ஆய்வகம் அமைய இருக்கிறது.
குமரியில் இப்போது கரோனா வார்டில் சிகிச்சையில் இருந்து இறந்தவர்களுக்கு கரோனா அறிகுறி இல்லை. பின் எப்படி இறக்கிறார்கள் என மக்களிடம் கேள்வி எழுகிறது. பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் நீண்டகாலமாக அதிதீவிர உடல் உபாதையால் சிகிச்சை பெற்று வருவோருக்கு காய்ச்சல் இருந்தாலே மருத்துவர்கள் கரோனா வார்டுக்குப் பரிந்துரைத்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் வேறு நோய்களின் தீவிரத்தால் கரோனா வார்டில் மரணம் நிகழ்ந்துவிடுகிறது.
எனவே, மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் தொடர் இருமல், காய்ச்சல், தொண்டைவலி, உடல்வலி என கரோனா அறிகுறி இருப்போருக்குத் தனி வார்டும், பிறநோய்களோடு கரோனா தொற்று இருக்குமோ என சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்குத் தனி வார்டும் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் காய்ச்சல் இருந்தாலே இந்த வார்டில் சேர்த்ததால்தான் இயல்பான மரணங்களும், கரோனா அச்சத்தை ஏற்படுத்திவிட்டன.
மாவட்ட நிர்வாகமும், அரசும் முழுவீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நானும் எனது சொந்த செலவில் ராஜாக்கமங்கலம் துறை, கேசவன்புத்தன்துறை, பள்ளம் உள்ளிட்ட கடற்கரைக் கிராமங்களில் கருவியுடன் கிருமிநாசினி வாங்கிக் கொடுத்து தெளிக்கச் சொல்லியிருக்கிறேன். இதுபோக, வெளிமாவட்டங்களில் இருந்து குமரிக்கு வரமுடியாமல் தவிப்போர்க்கு ஹெல்ப்லைன் அமைத்திருக்கிறேன்.
அழகியபாண்டியபுரம், காட்டுப்புதூர் கிராமங்களில் குடிநீர் பிரச்சினை இருப்பதாக தகவல்கள் வந்தது. உடனே பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் கொடுத்துள்ளோம். சென்னையில் சுகாதாரத்துறை இனை இயக்குநராக இருக்கும் மதுசூதனனை சிறப்புப் பணியாக குமரியில் கரோனா ஒழிப்புப் பணியில் இணைத்திருக்கிறோம்.
மாவட்டத்தில் உணவின்றி தவிப்போருக்கு சாப்பாடு கிடைக்க வழி செய்திருக்கிறோம். அதற்கு எனது போன் எண்ணையே கொடுத்து அழைக்கக் கேட்டிருக்கிறேன். முன்பெல்லாம் வெளிநாடுகளில் இருந்து வந்தால்தான் தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கர் வீடுகளில் ஒட்டினோம். இப்போது வெளிமாவட்டத்தில் இருந்து வந்தாலே அதை ஒட்டத் தொடங்கியிருக்கிறோம். கடற்கரை கிராமங்களில் காவலர்கள் மூலம் மைக்கில் வெளியில் இருந்து யாரும் வந்திருக்கிறார்களா என போலீஸார் கேட்டு வருகிறார்கள். அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. குமரி மாவட்ட மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். தனித்திருப்போம். கரோனாவில் இருந்து தப்பிப்போம்.''
இவ்வாறு தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT