Last Updated : 30 Mar, 2020 04:37 PM

 

Published : 30 Mar 2020 04:37 PM
Last Updated : 30 Mar 2020 04:37 PM

ஊத்தங்கரை அருகே தண்ணீர் பிடிப்பதில் இரு தரப்பினர் மோதல்; ஒருவர் அடித்துக் கொலை

பிரதிநிதித்துவப் படம்

ஊத்தங்கரை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடி தண்ணீர் பிடிப்பதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புதூர் புங்கனை ஊராட்சி ஒட்டம்பட்டி அருகே உள்ள பகவத் சிங் நகரைச் சேர்ந்தவர் முனுசாமி (60), கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (52). நேற்று (மார்ச் 29) பகல் 1 மணியளவில் குழாய் குடிநீரை நாகராஜ் குடும்பத்தினர் அவரது செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி உள்ளனர்.

இதற்கு முனுசாமி குடும்பத்தார் "குடிக்கவே தண்ணீர் இல்லையே" எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாகராஜ் அவரது மகன்கள் மாரிமுத்து (23), இளையராஜா (30), அருண்பாண்டியன் (29) மற்றும் முருகன்(45), வேலு (39), பிரபாகரன் (22), சின்னபாப்பா (48), சரோஜா (44) உள்ளிட்ட 9 நபர்கள் சேர்ந்து முனுசாமி குடும்பத்தைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், முனுசாமியின் மகன் கோவிந்தசாமியை (32) கத்தியால் வெட்டியதில் படுகாயத்துடன் கீழே விழுந்துள்ளார். மகனை அடித்ததைத் தட்டிக் கேட்ட தந்தை முனுசாமியை தாக்கியதில் பலத்த காயத்துடன் அவரும் கீழே விழுந்துள்ளார்.

இருவரையும் சேலம் அரசு மருத்துவமனையில் உடனடியாகச் சேர்த்தனர். ஆனால், நேற்று இரவு 11 மணியளவில் முனுசாமி இறந்து விட்டார். அவரது மகன் கோவிந்தசாமி கவலைக்கிடமாக உள்ளார். மேலும், தடுக்கச் சென்ற முனுசாமி குடும்பத்தைச் சேர்ந்த குமார் (29), ஆனந்த் (28), கண்ணப்பன் (27), சுதா (26) ஆகியோர் படுகாயத்துடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முனுசாமியின் மகன் குமார் (29) கொடுத்த புகாரின் பேரில் கொலை வழக்கு சம்பந்தமாக நாகராஜ் மற்றும் அவரது குடும்பத்தைச் சார்ந்த 7 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x