Published : 30 Mar 2020 04:35 PM
Last Updated : 30 Mar 2020 04:35 PM
சிவகங்கை மாவட்டத்தில் சேவையுள்ளத்துடன் முகக் கவசம் தைத்துக் கொடுக்க தயாராய் இருப்பவர்கள் தன்னைத் தொடர்பு கொண்டால் அதற்கான துணி, நூல் உள்ளிட்ட பொருட்கள் அவர்கள் இருக்கும் இடத்துக்கே சப்ளை செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறார் சிவகங்கை எம்.பி.-யான கார்த்தி சிதம்பரம்.
ஊரடங்கு சமயத்தில் தொகுதி மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களைச் சரிசெய்து கொடுப்பதற்காக கடந்த ஒரு வார காலமாக காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள தனது பண்ணைத் தோட்டத்தில் தங்கியிருக்கிறார் கார்த்தி சிதம்பரம். யாரும் தன்னைச் சந்திக்க நேரில் வரவேண்டாம் என ஏற்கெனவே தெரிவித்துவிட்ட அவர், தொகுதி மக்கள் ஏதாவது பிரச்சினை என்றால் தன்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மின்னஞ்சல் வழியாகவும் போன் மூலமாகவும் தனக்கு வரும் தகவல்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நபர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைக்கிறார். சிவகங்கை மாவட்டத்திலிருந்து மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூருக்கு பணிக்காக சென்றிருக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் சொந்த ஊருக்கு வர உதவி செய்யுமாறு கார்த்தியைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள்.
இதையடுத்து, சோலாப்பூர் பகுதியின் சிவசேனா எம்.பி.-யான ஜெய் சித்தேஷ்வர் சிவாச்சார்ய மஹா சுவாமிஜியை தொடர்பு கொண்ட கார்த்தி, சிவகங்கைவாசிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.
இதேபோல், கேரள மாநிலம் கோட்டயத்துக்கு கொத்தனார் வேலைக்காக சென்றிருந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 25 பேர் அங்கிருந்து ஊர் திரும்ப முடியாமல் அவதிப்படுவதாக கார்த்திக்கு தகவல் வந்திருக்கிறது. இதையடுத்து, கோட்டயத்தின் கேரள காங்கிரஸ் (எம்) எம்.பி-.யான தாமஸ் சாழிகாடனை தொடர்பு கொண்டு பேசிய கார்த்தி, சிவகங்கை தொகுதிவாசிகளுக்கு அங்கேயே உணவு மற்றும் தங்குமிட வசதிகளை செய்துகொடுக்கச் சொல்லி இருக்கிறார்.
இதனிடையே, சிவகங்கை மாவட்டத்தில் முகக் கவசங்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாக வந்த தகவலை அடுத்து, தையல் மெஷின் வைத்திருப்பவர்கள் சேவை உள்ளத்துடன் முகக் கவசங்களை தைத்துக் கொடுக்க முன் வந்தால் அவர்கள் இருக்கும் இடத்துக்கே முககவசத்துக்கான துணி, நூல் உள்ளிட்டவைகளை வழங்க தயாராய் இருப்பதாக அறிவித்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT