Published : 30 Mar 2020 01:51 PM
Last Updated : 30 Mar 2020 01:51 PM
மதுரையில் கரோனா அச்சத்துடன் சேர்ந்து குடிநீர் பற்றாக்குறையும் மக்களை மிரட்ட ஆரம்பித்துள்ளது. பற்றாக்குறையுள்ள வார்டுகளில் லாரி, டிராக்டர் கொண்டு விநியோகம் செய்தாலும் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்க முடியவில்லை.
மதுரை மாநகராட்சிக்கு வைகை அணை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பெறப்படுகிறது. தற்போது வைகை அணை நீர் மட்டம் 46.58 அடியாக உள்ளது. 1,574 மில்லியன் கன அடி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது.
அணைக்கு நீர் வரத்து சுத்தமாக இல்லை. குடிநீருக்காக தினமும் 60 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதில், 49 கன அடி தண்ணீர் மதுரை மாநகராட்சிக்கும், மீதி 11 கன அடி தண்ணீர் சேடப்பட்டி, ஆண்டிப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கும் செல்கிறது.
நீர் வரத்து சுத்தமாக இல்லாததால் வைகை அணை நீர் மட்டம் வீழ்ச்சியடைந்து வருகிறது. தற்போது மக்கள் ‘கரோனா’ ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் முடங்கிப்போய் உள்ளதால் மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் தண்ணீர் பயன்பாடு அதிகரித்துள்ளது.
ஆனால், மாநகராட்சியால் வழக்கம்போல் கூட தற்போது குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. போலீஸார் கெடுபிடியால், தனியார் குடிநீர் லாரிகள் மக்களுக்கு தண்ணீரை விநியோகம் செய்யமுடியில்லை. அதனால், மக்கள் ஒட்டுமொத்தமாக குடிநீருக்காகவும், வீட்டு உபயோகத்திற்காகவும் மாநகராட்சியையே சார்ந்து இருக்க வேண்டிய உள்ளது.
ஆனால், தற்போது மாநகராட்சி அதிகாரிகள் ‘கரோனா’ தடுப்புப் பணியில் முழுகவனத்தையும் செலுத்தி வருவதால் அவர்களால் குடிநீர் விநியோகத்தை சீராக வழங்க முடியவில்லை. புறநகர் வார்டுகளில் முழுக்க முழுக்க லாரிகள் மூலமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
அதுபோல், நகர்பகுதியில் அழுத்தம் குறைவாக உள்ள குடியிருப்பு பகுதிகளில் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. அதனால், இப்பகுதிகளுக்கு லாரிகள் மூலமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. லாரி தண்ணீர் வரும்போது மக்கள் முண்டியடித்து சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம், கூட்டமாக தண்ணீரை பிடிக்கின்றனர்.
அதனால், ‘கரோனா’ பரவும் அபாயம் உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாநகராட்சியில் 35 லாரிகள், 25 டிராக்டர்களை கொண்டு பற்றாக்குறையுள்ள வார்டுகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
லாரி தண்ணீரை விநியோகம் செய்தாலும் மக்களை சமூக இடைவெளி விட்டே குடிநீர் விநியோகம் செய்ய அறிவுறுத்தி உள்ளோம். அதுமட்டுமில்லாது தண்ணீரை பம்பிங் செய்யும்
அரசடி, கோச்சடை பம்பிங் ஸ்டேஷனில் கூட ஒரே நேரத்தில் லாரிகள், டிராக்டர்கள் வராத அளவிற்கு ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது, ’’ என்றனர்.
பொதுப்பணித்துறை அதிகாரியிடம்கேட்டபோது, ‘‘மே வரை எந்த பிரச்சினையும் இல்லை. அதன்பிறகு மழை பெய்தால் மட்டுமே மதுரைக்கு குடிநீர் கிடைக்கும், ’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT