Published : 30 Mar 2020 01:36 PM
Last Updated : 30 Mar 2020 01:36 PM
நாகர்கோவிலில் வழக்கமாக டூவீலருக்கு பெட்ரோல் போடும் அந்த பெட்ரோல் பங்க்கிற்குள் நுழைந்ததும், "வாங்க சார்... ஊரெல்லாம் எப்படி இருக்கு... ரிப்போர்ட்டர்கிட்ட கேட்டாதானே தெரியும்" என பதைபதப்போடு கேட்கிறார் பெட்ரோல் போடும் அமுதா அக்கா.
வாயையும், மூக்கையும் சேர்த்து கர்ச்சீப்பால் இறுகக் கட்டியிருக்கிறார். ''கரோனா கிருமி ஒண்ணும் அவ்வளவு வேகமா பரவலையே...” என மீண்டும் கேட்ட அமுதாவிடம் டூவீலரை ஒதுக்கி வைத்துவிட்டு பேச்சுக் கொடுத்தேன். “வீட்டுக்காரரு டீ மாஸ்டர். ஊரடங்கு உத்தரவில் டீக்கடைங்க மூடியாச்சு. இப்போ என்னோட வருமானத்தில்தான் மொத்தக் குடும்பமும் ஓடணும். அன்றாட வேலை செய்யுற எங்களுக்கு உடல் உழைப்புதான் ஒரே சேமிப்பு. அதான் இந்த சூழலிலும் விடாம வேலைக்கு வர்றேன்.
வீட்ல ஒன்றரை வயசுல எனக்கு மகன் இருக்கான். பேரு முகேஷ். என்னைப் பார்க்காம இருக்கவே மாட்டான். இப்போ முதல்வரு பெட்ரோல் நிலையத்தோட நேரத்தைக் குறைச்சுட்டாரு அதனால சீக்கிரம் பையனைப் பார்க்க போயிடலாம். ஆனா, நிறையப் பேரு பெட்ரோல் போட வர்றாங்க. அவுங்களில் எத்தனை பேரு ஃபாரினில் இருந்து சமீபத்தில் வந்தவங்கன்னு தெரியாதுல்ல?
அதனால வீட்டுக்குப் போனதுமே குளிச்சுட்டுத்தான் பையன்கிட்டயே போவேன். இங்க பெட்ரோல் பங்க்ல முக உறை, கையுறையெல்லாம் கொடுத்தாங்க. ஆனா, எனக்கு கர்ச்சீப் கட்டிக்கறது ஈஸியா இருக்கு. ஊரே தொற்றுநோய் பயத்தில் இருக்கும்போது வீட்ல சின்ன பையனையும் வைச்சுகிட்டு பெட்ரோல் நிலையத்துல இருந்து ரிஸ்க் தான் எடுக்கேன். பையனுக்குப் பசிக்குமே... இந்த சூழலைப் புரிஞ்சுக்குற வயசா அவனுக்கு?
வழக்கமா ஆயிரம் லிட்டர் பெட்ரோலோ, டீசலோ அடிச்சா ஓனர் கமிஷன் கொடுப்பாரு. அதுக்காக துரிதமா நிப்போம். ஆனா, இந்த கரோனாவால யாரும் பெட்ரோல் போட வந்தாலே, “ரொம்ப அவசியமாப் போக வேண்டி இருக்கா?”ன்னு அறிவுரை சொல்ல ஆரம்பிச்சுட்டேன்.
வழக்கம்போல பெட்ரோல் அடிக்க கூட்டம் இல்லைதான். ஆனாலும் இப்போ வர்றவங்களைப் பார்த்து ரொம்பவே சங்கடப்படுறேன். கூடுதல் பெட்ரோல் அடிச்சா கமிஷன் கிடைக்கும்ங்குற எல்லைக்கோடெல்லாம் தாண்டிட்டேன். இப்போ பெட்ரோல் போடவரும் பலரும் மெடிக்கலுக்கு அவசரமாப் போறவங்கதான். ஆனா, அதைத்தாண்டி அவசியம் இருந்தா மட்டும் வெளியே வாங்கன்னு இன்னும் நிறைய, நிறைய எழுதுங்க சார்...” என கைகளை அகல விரித்துக் காட்டுகிறார் அமுதா அக்கா.
வீதியில் அத்தியாவசியத் தேவையின்றி சுற்றுவோருக்கு இந்தக் குரலும் எட்டட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT