Published : 30 Mar 2020 01:05 PM
Last Updated : 30 Mar 2020 01:05 PM

தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 67 ஆக உயர்வு; ஒரே நாளில் 17 பேருக்கு பாதிப்பு; முதல்வர் பழனிசாமி பேட்டி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தில் இன்று மட்டும் 17 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது

சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர்மட்ட அதிகாரிகளுடன் இன்று (மார்ச் 30) முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் பின்னர், முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"உலக அளவில் 199 நாடுகளில் கரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இந்தியாவில் 27 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஒருவர் மட்டும்தான் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் 1,139 பேருக்கு கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கெனவே 50 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 17 பேருக்கு தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 67 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு, தனியார் மருத்துவமனைகள் சேர்த்து 17 ஆயிரத்து 89 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனியார், அரசு மருத்துவமனைகளில் 3,018 வென்டிலேட்டர்கள் உள்ளன. அரசு, தனியார் சேர்ந்து சோதனை செய்வதற்கான ஆய்வு வசதி 14 மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 3 சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

2 லட்சத்து 9,234 பயணிகள் இதுவரை விமான நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 3,470 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு நிறைவடைந்துள்ளது. 1,981 பேருக்கு ஆய்வகப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 43 ஆயிரத்து 537 பேர் வீடுகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 1,641 பேர் இதுவரை கண்காணிப்பு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.

1,975 பேர் சந்தேகத்தின் பேரில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரோனா உறுதியாகி பின்னர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 பேர்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x