Published : 30 Mar 2020 12:57 PM
Last Updated : 30 Mar 2020 12:57 PM

கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி தரும் பள்ளிகள் மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

கரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் கல்விக் கட்டணத்தைக் கேட்டு நெருக்கடி தரும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வருவாய் இழந்து வாடி வரும் நிலையில், அடுத்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோருக்கு தனியார் பள்ளிகள் நெருக்கடி அளிக்கத் தொடங்கியுள்ளன. பெற்றோரின் நிலைமையைப் புரிந்துகொள்ளாத தனியார் பள்ளிகளின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதற்கு முன்பே கரோனா வைரஸ் அச்சம் காரணமாக அனைத்து வகையான தொழில்களும், வணிகமும் முழுமையாக முடங்கி விட்ட நிலையில் பல்வேறு தரப்பினரும் வருவாய் இல்லாமல் வாடி வருகின்றனர்.

இதனால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைக் களைவதற்காக, பாமக கேட்டுக்கொண்டவாறு, அனைத்து வகையான கடன்களின் மாதத் தவணைகளை அடுத்த 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கும்படி வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது.

அதேபோல், பள்ளிகளின் கல்விக் கட்டணத்தையும் அடுத்த 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வந்தது. அதையேற்று கல்விக் கட்டணங்களை வசூலிப்பதை தனியார் பள்ளிகள் ஒத்திவைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால், அதைப் பொருட்படுத்தாத தனியார் பள்ளிகள் அடுத்த கல்வியாண்டுக்கான கட்டணத்தை வரும் ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று பெற்றோருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகத் தகவல் தெரிவித்துள்ளன. குறித்த காலத்தில் கல்விக் கட்டணத்தைச் செலுத்தத் தவறும் குழந்தைகள் பள்ளிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் எச்சரித்துள்ளன. இது ஏற்கக்கொள்ள முடியாதது ஆகும்.

அமைப்பு சார்ந்த துறைகளில் பணியாற்றும் ஒரு சில பிரிவினரைத் தவிர மற்ற பிரிவினர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். அவர்களால் மாதக் கடன் தவணைகளைச் செலுத்த முடியாது என்பதை உணர்ந்ததால்தான், அவற்றை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆணை பிறப்பித்துள்ளது.

மாதக் கடன் தவணைகளுடன் ஒப்பிடும்போது பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் மிக அதிகமாகும். சில பள்ளிகளில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இன்றைய சூழலில் பெரும்பான்மையான பெற்றோர் கல்விக் கட்டணம் செலுத்தும் நிலையில் இல்லை.

இதை உணராமல் கல்விக் கட்டணத்தை உடனடியாகச் செலுத்துங்கள் அல்லது குழந்தைகளைப் பள்ளியிலிருந்து நீக்கி விடுவோம் என்று தனியார் பள்ளிகள் அச்சுறுத்துவதை அரசு அனுமதிக்கக்கூடாது. அதுவும், அடுத்த கல்வியாண்டு வரும் ஜூன் மாதத்தில் தொடங்கும் நிலையில், அதற்கான கட்டணத்தை இப்போதே செலுத்தும்படி கூறுவது மனித நேயமற்ற செயலாகும்.

எனவே, பள்ளிகள் தொடங்கி, முதலாம் பருவம் முடிவடையும் வரை தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதையும் மீறி ஏதேனும் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலித்தால், அந்தப் பள்ளிகளை அரசாங்கமே கையகப்படுத்தி நடத்துவதற்கு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x