Last Updated : 30 Mar, 2020 10:09 AM

 

Published : 30 Mar 2020 10:09 AM
Last Updated : 30 Mar 2020 10:09 AM

ஊரடங்கு நடுவே கூடிய புதுச்சேரி சட்டப்பேரவை; ரூ.2042 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்

ஊரடங்கு நடுவே கூடிய புதுச்சேரி சட்டப்பேரவை

புதுச்சேரி

கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்குக்கு நடுவிலும் புதுச்சேரி சட்டப்பேரவை இன்று கூடியது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாத செலவினங்களுக்கு ரூ.2,042 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய இடைக்கால பட்ஜெட் தாக்கலானது. கரோனா பாதிப்பு தொடர்பாக உடன் பேச அனுமதி தராததால் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுவையில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலை மாறி கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்பின் சில மாதங்கள் கழித்து மீண்டும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அதிலும் கடந்த சில ஆண்டுகளாக புதுவை அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு சரியான நேரத்தில் அனுமதி அளிக்காததால் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில் உரிய நேரத்தில் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால் சட்டப்பேரவைக் கூட்டமே தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது கரோனா அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையிலும் வரும் மாத செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தேவையாக உள்ளது. அடுத்த மாதம் ஊதியம் ஒப்புதல் தருவது, நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெறும் வகையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய இன்று (மார்ச் 30) காலை சட்டப்பேரவை கூடியது.

சமூக இடைவெளிக்காக இருக்கைகள் சட்டப்பேரவையில் தள்ளி போடப்பட்டிருந்தது. எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸார் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. அதிமுக எம்எல்ஏக்கள் கிருமிநாசினி இயந்திரத்துடன் வளாகத்துக்குள் வந்திருந்தனர்.

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முகக்கவசமும், கிருமி நாசினி பாட்டிலும் தரப்பட்டது.

அவை தொடங்கியதும் மறைந்த தமிழக முன்னாள் அமைச்சர் அன்பழகன், கரோனாவோல் உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவை உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

அப்போது கூடுதல் செலவின மதிப்பீடுகளை காட்டுக்கின்ற அறிக்கை தாக்கல் செய்தபோது கரோனா தொடர்பான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பாக பேச அதிமுக சட்டப்பேரவை தலைவர் எம்எல்ஏ அன்பழகன் அனுமதி கோரினார்.

இறுதியில் வாய்ப்பு தருவதாக சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்தார். அதை ஏற்காமல் அதிமுக எம்எல்ஏகள் சபாநாயகர் இருக்கை முன்பு சென்று முற்றுகையிட்டு வலியுறுத்தினர். ஆனால், தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் ஆனதால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இச்சூழலில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களுக்கு ரூ.2,042 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கலானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x