Published : 30 Mar 2020 07:34 AM
Last Updated : 30 Mar 2020 07:34 AM
கரோனா வைரஸ் சிகிச்சைக்கு ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ மாத்திரைகளைப் பயன்படுத் தலாம் என்ற பரிந்துரையால், அவற்றைப் பதுக்குவது அதிகரித்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் அறிகுறிகளுடன் உள்ளவர்களை கவனித்துக்கொள்ளும் மருத்து வர்கள், செவிலியர்களுக்கும் இத்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவப் பணியாளர்களுக்கும், கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டவர்களுக்கும் ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்' (Hydroxy chloroquine) மாத்திரையை அளிக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) கடந்த 22-ம் தேதி பரிந்துரை செய்தது.
இந்த தகவல் பரவத் தொடங்கியதும், இம்மாத்திரைகளைப் பதுக்குவது அதிகரித்துள்ளது. மலேரியா, முடக்குவாதம், மூட்டு, தசை தொடர்பான நோய்களுக்கும் இந்த மாத்திரை பயன்படக்கூடியதாகும். பதுக்கல் காரணமாக, இந்த மாத்திரை தேவைப்படும் நோயாளிகளுக்கு, தற்போது இம்மாத்திரை கிடைக்காமல், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
2 நாட்களாக தட்டுப்பாடு
இது தொடர்பாக முடக்குவாத நோயாளி கள் சிலர் கூறும்போது, `ஹைட்ராக்ஸி குளோரோகுயின்' மாத்திரையை உட் கொள்ளாவிட்டால் நடக்கவே முடியாது. தினமும் அந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும். ஆனால், கடந்த 2 நாட்களாக இம்மாத்திரைக்கு தட்டுப்பாடு உள்ளது. மாத்திரை இல்லாவிட்டால் மூட்டு வீக்கம் ஏற்பட்டு, எந்தப் பணியும் செய்ய முடி யாத நிலை ஏற்படும். மருந்து விற்பனை யாளர்களிடம் கேட்டால், `போக்குவரத்தில் சிரமங்கள் இருப்பதால் மொத்த விற்பனையாளர்களிடமிருந்து எங்களுக்கு மாத்திரை வருவதில்லை' என்று கூறுகின்றனர். எனவே, பதுக்கலைத் தடுத்து, தேவையானவர்களுக்கு மாத்திரை கிடைக்க மருந்து கட்டுப்பாட்டுத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இதுகுறித்து நுரையீரல் சிறப்பு மருத்துவர் வி.நந்தகோபால் கூறும்போது, "மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில் மட்டுமே இந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும். இல்லையேல், இதய பாதிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படும். ஐஎம்சிஆர் பரிந்துரை மட்டுமே செய்துள்ளது. இன்னும் கரோனா மருந்து தொடர்பான ஆராய்ச்சிகள் முடியவில்லை. எனவே, மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் யாரும் இந்த மாத்திரையை சுயமாக வாங்கி உட்கொள்ள வேண்டாம்” என்றார்.
மருந்து சீட்டு அவசியம்
கோவை மண்டல மருந்து கட்டுப்பாட்டுத் துறை உதவி இயக்குநர் எஸ்.குருபாரதி கூறும்போது, "மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் யாருக்கும் ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்' மாத்திரைகளை அளிக்கக்கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. டோர் டெலிவரி செய்வதற்கும் இந்த உத்தரவு பொருந்தும். டோர் டெலிவரி பெற விரும்பும் நோயாளிகள், பரிந்துரைச் சீட்டை கடைக்காரருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். இந்த உத்தரவை மீறுவது தொடர்பான புகார் வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாத்திரைக்கு முழுமையாக தட்டுப்பாடு இல்லை. இருப்பினும், விற்பனையாளர்களிடம் இருப்பு அளவு குறைந்துள்ளது.
144 தடை உத்தரவால் மருந்து விநியோகம் தடைபடாமல் இருக்கவும், போக்குவரத்தின்போது போலீஸாரிடம் காண்பிக்கவும் அனைத்து மருந்து விற்பனையாளர்களுக்கும் அனுமதிக் கடிதம் அனுப்பியுள்ளோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT