Published : 30 Mar 2020 07:07 AM
Last Updated : 30 Mar 2020 07:07 AM

முக்கிய கால கட்டத்தில் ஊரோடு தனித்து வாழ்வோம்: எச்சரிக்கை தவறேல்; வெல்வோம் கரோனா வைரஸை

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

இன்று ஒட்டு மொத்த உலகமும் உச்சரிக்கும் ஒற்றைச் சொல், ‘கரோனா’. இச்சொல்லுக்கான அர்த்தம் கிரீடம். பெயருக்கு பொருத்தமாகவே உலகின் 176 நாடுகளில் கோலோச்சுகிறது கரோனா. முதல் 3 மாதங்களில் ஒரு லட்சம் நோய்தொற்றுகள் ஏற்பட்டன; அடுத்த ஒரு லட்சம்தொற்றுகள் வெறும் 12 நாட்களில் ஏற்பட்டன என்ற உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பு கரோனாவின் குதிரைப் பாய்ச்சலை சொல்கிறது.

நிலைமையின் விபரீதத்தை உள்வாங்கி நேர்மறை சிந்தனையோடு கரோனாவின் கடுமையை எதிர்கொள்ள சில புரிதல்கள் அவசியம். கரோனா வைரஸ் 4 படிநிலை களில் உலக நாடுகளில் தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது.

இறக்குமதி தொற்று: கரோனா பாதித்த நாடுகளில் பயணித்தவர்கள் மூலமாக ஒரு நாட்டுக்குள் தொற்று நுழைவது முதல் நிலை.

உள்ளூர் தொற்று: பாதிப்படைந்த நாடுகளில் பயணித்து தொற்றோடு திரும்பியவரோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று நிகழ்வது 2-வது நிலை.

சமுதாயத் தொற்று: வெளிநாட்டு பயணம் செய்யாமலும், அப்படி பயணம் செய்தவரின் தொடர்பில் இல்லாதவர்களுக்கும் நோய் தொற்றுவது 3-வது நிலை.

கொள்ளை நோய்: எவ்வித கட்டுப்பாடின்றி நாடு முழுவதும் நோய் தொற்று பரவுவது 4-வது நிலை.

இந்த படிநிலைகளில் 3 மற்றும் நான்காவது படி நிலைகளுக்கு பல நாடுகள் சென்று விட்டன. இந்தியா தற்போது 2-வது நிலையில் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவித்துள்ளது. கரோனாவைப் பற்றி பொதுபுத்தியில் உள்ள சில கருத்தாக்கங்கள் அச்சமூட்டுகின்றன. அவற்றை அலசித் தெளிவோம்.

கரோனா வைரஸைத் தடுக்க இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லையே?

ஆம்! கரோனாவுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டால்தான் அதற்கான தடுப்பு மருந்து உருவாக்கப்படும். தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சிகள் உலக அளவில் நடந்து வருகின்றன. பல சோதனைகளைக் கடந்து, அதனால் பக்க விளைவுகள் இல்லை என்று நிரூபணமானால்தான் தடுப்பு மருந்தை சிகிச்சைக்காக பயன்படுத்த முடியும். இந்நிலையில் கரோனா குடும்பத்தை சார்ந்த பிற வைரஸ் நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் கரோனா-19 வைரஸ் சிகிச்சைக்கும் உலகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி அளிக்கப்பட்ட சிகிச்சைகளில் இந்தியாவில் 9 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். எபோலா, சார்ஸ் கிருமிகள் ஏற்படுத்திய மரண சதவீதத்தை விட கரோனா 19 கிருமியின் வீரியம் குறைவு.

கரோனாவால் முதியவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்களாமே?

வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. கூடவே மூப்பு தொடர்பான உடல்நலக் குறைவுகளும் இருக்கும். இதனால் கரோனா மட்டுமல்ல எந்தக் கிருமியின் தாக்குதலும் அவர்களுக்கு உகந்ததல்ல. சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில்கரோனா பாதிப்புக்கு ஆளான இத்தாலியில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முதியோர்கள்தாம். அதே நேரத்தில் இத்தாலியை விடஅதிக சதவீதத்தில் முதியோர் வாழ்கிற ஜப்பான், நேர்த்தியான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளாலும் மக்களின் சுயக் கட்டுப்பாட்டினாலும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது.

எச்சரிக்கை தவறேல்: முன்பு குறிப்பிட்டது போல இந்தியா இப்போது உள்ளூர் தொற்று என்ற கரோனாவின் 2-வது படிநிலையில் இருக்கிறது. மூன்றாம் படிநிலை என்ற ஆபத்தான கட்டத்துக்கு செல்வதற்கு இன்னும் சில வாரங்கள் உண்டு. இந்த கால கட்டத்தில் கடுமையான சுயக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தாக வேண்டும். கரோனா தொற்றை தடுப்பது நம்மை நோயில் இருந்து காப்பதோடு, நோய் நம் குடும்பத்தார், சுற்றத்தாருக்கு பரவாமலும் தடுக்கும். நாட்டுக்கு நாம் செய்கிற மகத்தான கடமை இன்னும் சில வாரங்கள் நாமும் நம் குடும்பத்தாரும் எச்சரிக்கையோடு தனிமைப்படுத்திக் கொள்வதாகும்.

அறிகுறிகள் இல்லாத ஆபத்து: கரோனா நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர்பாதிப்பின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல் உள்ளிட்ட எதையும் வெளிப்படுத்தாத நிலையிலும் கிருமிகள் அவர் மூலமாக பிறருக்கு பரவும் என்பது உண்மை. முன்னெச்சரிக்கை மிகவும் தேவை. இதனால்தான் வீட்டுக்குள் இருப்பது பாதுகாப்பானது என அறிவுறுத்தப்படுகிறது. சாதாரணமாக 5 பேர் வசிக்கிற வீட்டில் 10 விருந்தாளிகள் வந்தால், சமையலறை, குளியலறை, வரவேற்பறை என எல்லாம் அல்லோகலப்படும். அதே வீட்டில் 100 விருந்தாளிகள் வந்தால்? கரோனா பாதிப்பு அதிகரித்தால் மருத்துவ சேவை அளிப்பதில் இப்படிப்பட்ட கட்டமைப்பு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, வருமுன் காப்பதே சிறந்தது. 10 லட்சம் குடிமக்களுக்கு 5,200 பேர் வீதம் ரத்த பரிசோதனைகளை செய்திருக்கிறது தென் கொரியா. 10 லட்சம் பேருக்கு 74 பேர் என்ற விகிதத்தில் அமெரிக்காவில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் தனியார் சோதனைக் கூடங்களை இணைத்தாலும் நமது மக்கள் தொகை இதை ஒரு கட்டமைப்பு சிக்கலாக்கலாம். எனவே, வருமுன் காப்பதே சிறந்தது.

நம்பிக்கை வெளிச்சங்கள்: கரோனா பாய்ச்சலை உலக நாடுகள் கட்டுப்படுத்த போராடுகிற வேளையில், இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் துணிச்சலாக களமாடுவது நம்பிக்கை அளிக்கிறது. வெளிநாட்டு பயணம் செய்து இந்தியா திரும்பி தொற்றுக்கு ஆளானவர்களின் தொடர்புகளை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சிகள் நோய் கட்டுப்பாட்டில் முக்கிய விளைவுகளைத் தந்திருக்கின்றன.

3-ம் உலகப்போர்: பக்கத்து தெருவில் கரோனா, எதிர்வீட்டில் கரோனா என சமூக வலைதள செய்திகளில் சிதறாமல், உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஆகியவற்றின் வலைதளங்களை தினமும் பார்த்து நம்மை நாம் தயார்ப்படுத்திக் கொள்வோம்.

அத்தியாவசியத் தேவைகள் தவிர வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது கரோனாவை தடுக்கும். ஊரோடு தனித்து வாழ்வோம். இது கரோனாவுக்கு எதிரான உலக யுத்தம். இந்த மூன்றாம் உலகப் போரில் நாம் போர்முனைக்குச் செல்லத் தேவையில்லை. வீட்டில் ஓய்வெடுத்தபடியே வெல்லலாம். வெல்வோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x