Published : 29 Mar 2020 08:14 PM
Last Updated : 29 Mar 2020 08:14 PM
21 நாட்கள் ஊரடங்கு ஏன் என்பதை விளக்கிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உருக்கமான வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. பிரதமர் மோடி அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கை தமிழகத்தில் தீவிரமாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். மக்கள் அனைவருமே வீட்டிற்குள்ளே இருக்கிறார்கள். வெளியே வரும் சிலரையும் தமிழக காவல்துறை எச்சரித்தும், தடியடி நடத்தியும், மஞ்சள் தண்ணீர் ஊற்றியும் வீட்டிற்கு அனுப்பி வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பணிகளைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். இதனிடையே, கரோனா அச்சம் குறித்தும், 21 நாட்கள் ஊரடங்கின் பின்னணி என்ன என்பது குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் 2 வீடியோ பதிவுகள் வெளியிட்டுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"இந்த 144 தடை உத்தரவு இருக்கக்கூடிய சமயத்தில் உங்களுக்கு ஒரு சின்ன அப்டேட்டை பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றின் வீரியம், பாதிப்படைந்த மக்களின் நிலை, அரசுகளுக்கு ஏற்பட்ட ஒரு நெருக்கடி இதெல்லாம் நாம் அலசிப் பார்க்கும்போது இந்த நோய் பரவலின் வேகம் என்பது மிகவும் அதிகம். ஒருவருக்கு இருப்பது 9 பேருக்கு என்று ஆகி பின்பு 999 என்று ஆகி, 9 லட்சமாகி, 9 கோடியாகி என்று வேகமாகப் பரவக்கூடிய நோயாக இருக்கிறது.
உலக அளவில் சீனா, வட கொரியா, இத்தாலி, ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் பார்த்தீர்கள் என்றால் முதல் 15, 2-வது 15, 3-வது 15, 4-வது 15 நாட்களில் 0, 1 என்று இருந்த எண்ணிக்கை 5-வது 15 நாளில் 1000 ஆகி, 6-வது 15 நாளில் 10000 என வந்து ரொம்பவே கடினமான நிலைக்குப் போய்விட்டது. அதுபோன்ற ஒரு காலகட்டம் நமது இந்தியாவுக்கோ, தமிழ்நாட்டுக்கோ வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் விமானப் போக்குவரத்து, பேருந்துப் போக்குவரத்து என நிறுத்தி இறுதியாக ஒட்டுமொத்தமாக லாக்-டவுன் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.
அதுவும் 21 நாட்கள் ஏன் என்பது ரொம்பவே முக்கியமான விஷயம். கரோனோ வைரஸின் கண்காணிப்புக் காலம் என்பது 14 நாட்கள். இடையே ஒருவருடன் தொடர்புகொள்ள நேர்ந்தால் ஒரு 7 நாட்கள். ஆக மொத்தம் 21 நாட்கள் நாம் சமூகத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் தனிமைப்படுத்திக் கொண்டோம் என்றால் நிச்சயமாக இந்த நோய்த் தொற்றைத் தவிர்த்துவிட முடியும். இப்போது வந்து கொண்டிருக்கும் நோய்த் தொற்று அனைத்துமே வெளிநாட்டிலிருந்து வந்தவர். அவருடன் தொடர்பு உடையவர் என்றுதான் பரவுகிறது. இதைத்தான் தொடர்ந்து சொல்கிறோம்.
இதெல்லாம் பார்த்துதான் இந்த தருணத்தில் வீட்டில் தனியாக இருங்கள் என்று சொல்கிறோம். உலக சுகாதார அமைப்பு ரொம்ப அழகாகச் சொல்கிறது. வீட்டில் இருப்பது ரொம்ப கஷ்டமான விஷயம்தான். பரபரப்பாகச் சுறுசுறுப்புடன் இருந்துவிட்டு வீட்டில் 21 நாட்கள் என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். அந்தக் கஷ்டம் யாருக்காக, மக்களுக்காகத்தானே.
அரசாங்கம் யாருக்காகச் சொல்கிறது? ஒரு முறை யோசியுங்கள். உங்களுக்காக முகக் கவசத்துடன், பாதுகாப்புக் கவசத்துடன் தூக்கம் மறந்து, குடும்பம் மறந்து, குழந்தைகள் மறந்து மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், தீயணைப்பு வண்டியின் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் தூய்மைக் காவலர்கள், செக் போஸ்ட்டில் போராடக் கூடிய வருவாய்த் துறை அதிகாரிகள், களத்தில் இருக்கக் கூடிய காவல்துறை அதிகாரிகள், மருத்துவமனைக்கு வரும் முதல்வர் என அனைவருமே உங்களுக்காகப் போராடுகிறார்கள்.
உங்களுக்காக இந்த அரசே பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, நம்ம என்ன செய்ய வேண்டும், யாருக்காகச் செய்கிறோம், உங்களுக்காக நமக்காக, நம் குடும்பத்துக்காக நீங்கள் உங்களை வீட்டிற்குள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.
இதை மீறுபவர்கள் எல்லாம் தண்டிக்கப்படுவார்கள் என்று அதிகாரத்தோடு சொன்னால் கூட உங்களை அன்போடு வேண்டிக்கொள்வது நமக்காக செய்கிறோம், நாட்டுக்காகச் செய்கிறோம் என நினைத்துக் கொள்ளுங்கள். இந்த 21 நாட்கள் வேள்வியாக இருந்து தனிமைப்படுத்திக் கொண்டால் நிச்சயமாக ஒரு பேராபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
குடும்பத்தைக் காத்துக் கொள்ள முடியும். சமூகத்தைக் காத்துக் கொள்ள முடியும். அதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலேயே இந்த நோய்ப் பரவலை நாம் கட்டுப்படுத்த முடியும். உலக சுகாதார அமைப்பு இந்தத் தருணத்தில் என்ன சொல்கிறது என்றால் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுங்கள். சத்தான உணவைச் சாப்பிடுங்கள். நல்ல தூக்கம் வேண்டும். நன்றாக ஓய்வெடுத்துப் புத்தகம் படியுங்கள். நல்ல இசையைக் கேளுங்கள். பெரியவர்கள் அரை மணிநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். சிறியவர்கள் 1 மணிநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். யோகா பண்ணுங்கள். உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள். குடும்பத்துடன் பேசி சந்தோஷமாகச் சிரித்து இருங்கள். அரசாங்கத்தின் உத்தரவு ஒரு புறம் இருந்தாலும், இதை உணர்வுரீதியாக வெளிக்காட்ட வேண்டும் என்பதை அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்".
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 29, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT