Published : 29 Mar 2020 06:47 PM
Last Updated : 29 Mar 2020 06:47 PM
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் உட்பட 3 வடமாநில இளைஞர்கள், லாரியில் சரக்கு ஏற்றிக் கொண்டு சில தினங்களுக்கு முன்னர் கோவைக்கு வந்தனர். பீளமேட்டில் சரக்கை இறக்கிய பின்னர், ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்ததால், செல்ல முடியாமல், பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் லாரியை நிறுத்தி விட்டு அதிலேயே தங்கினர். தங்களிடம் இருந்த மளிகைப் பொருட்களை பயன்படுத்தி, சில நாட்கள் உணவு சமைத்துச் சாப்பிட்டனர். மளிகைப் பொருட்கள் தீர்ந்த பின்னர் அவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை.
கடந்த இரண்டு நாட்களாக உணவு இல்லாமல் லாரியிலேயே தவித்த மூவரும், தங்களுக்கு உதவிடுமாறு, சொந்த ஊரில் உள்ள உறவினர்களிடம் வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் ட்விட்டர் பக்கத்தின் மூலம் இவர்களுக்கு உணவு வழங்கி உதவுமாறு, மேற்கண்ட லாரி ஓட்டுநரின் செல்போன் எண்ணை அதில் பதிவிட்டு மாநகர காவல்துறையிடம் உதவி கேட்டனர்.
ட்விட்டர் தகவலைக் கண்காணித்த மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், சட்டம் ஒழுங்கு (பொறுப்பு) துணை ஆணையர் செல்வகுமாரிடம் தெரிவித்து உதவிடுமாறு வலியுறுத்தினார்.
துணை ஆணையர், ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த அந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய லாரி ஓட்டுநர் உள்ளிட்டோருக்கு இந்தி தவிர வேறு மொழி தெரியவில்லை. இதையடுத்து இருப்பிடம் குறித்து அறிய, கூகுள் லொக்கேஷன் அனுப்புமாறு அவரிடம் துணை ஆணையர் வலியுறுத்தினார். இதைப் புரிந்து கொண்ட ஓட்டுநர், தங்களது இருப்பிடம் குறித்த 'கூகுள் லொகேஷன் லிங்க்'கை துணை ஆணையரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பினார்.
அதை வைத்து தண்ணீர் பந்தல் சாலையில் அவர்கள் இருப்பதைக் கண்டறிந்த துணை ஆணையர் செல்வகுமார், பீளமேடு போலீஸார் மூலம் உணவு மற்றும் அடுத்த சில நாட்களுக்கு உணவு சமைக்கத் தேவையான மளிகைப் பொருட்களை கொடுத்து சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 3 வடமாநில இளைஞர்களிடம் இன்று வழங்கினார்.
துணை ஆணையர் செல்வகுமார் கூறும்போது, ''இந்தியைத் தவிர வேறு மொழி அவர்களுக்குத் தெரியவில்லை. இருப்பினும், ஒரு வழியாக பேசி இருப்பிடத்தை கூகுள் லொக்கேஷன் மூலம் கண்டறிந்து உணவு, மளிகைப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டன'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT