Published : 29 Mar 2020 11:34 AM
Last Updated : 29 Mar 2020 11:34 AM
ஊரடங்கு நாட்களில் தெருநாய்களை தேடித்தேடி உணவளிக்கும் நெல்லையைச் சேர்ந்த முஹம்மது ஆயூபின் சேவை மனம் நெகிழச் செய்கிறது.
கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், வீடில்லாத ஆதரவற்றோர்களுக்கு தன்னார்வலர்கள் பலரும் உதவி செய்து வருகிறார்கள். அம்மா உணவகத்திலும் இலவச உணவு கிடைக்கிறது.
ஆனால் தெருநாய்கள் ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களில் உணவுக்காக தவித்துத் திரிகின்றன. தேனீர் கடைகள் அடைக்கப்பட்டதால் டீ குடிக்க வருவோர் சிலரது இரக்கத்தில் வாழ்ந்து வந்த தெருநாய்கள் பசியால் வாடி அலைவது பார்ப்பவர்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் நெல்லையைச் சேர்ந்த முஹம்மது அய்யூப் தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார். இவர் கடந்த 10 வருடங்களாக தொடர்ச்சியாக தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார்.
குறிப்பாக டவுணில் சில பகுதிகளிலும் பேட்டையில் சில பகுதிகளிலும் தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார். பள்ளிவாசலில் வேலை செய்யும் இவர், கிடைக்கும் வருவாயில் ஒரு சிறிய தொகையை நாய்களின் உணவிற்காக செலவிடுகிறார்.
இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துப்படுவதாக தகவல் வந்தவுடனேயே தேவையான அளவு பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கி இருப்பு வைத்துள்ளார்..
பள்ளிவாசல் வேலை தற்போதுள்ள சூழ்நிலையில் தடைபட்டிருந்தாலும் காலை 6 மணிக்கு உணவை எதிர்பார்த்திருக்கும் தெருநாய்கள் ஏமாற்றமடையக்கூடாது என்பதற்காக பேட்டையிலிருந்து அதிகாலை நேரம் வந்து உணவளிக்கிறார்.
அதைப்போன்று மற்ற இடங்களிலும் தெருநாய்களுக்கு உணவளிக்கிறார். தெருநாய்களுக்கு உணவு கொடுக்கும் வகையில் வாகனத்தில் செல்வோர்க்கு காவல்துறை அனுமதி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கிறார்.
தினசரி சுமார் 40 தெருநாய்களுக்கு வயிறார உணவு கொடுக்கிறார். அவரது செயலைக் கண்ட பொதுமக்கள் அவரை வெகுவாகப் பாராட்டினார்கள். அவ்வாறு பாராட்டியவர்களிடம் அவரவர் தெருவில் தென்படும் உயிரினங்களுக்கு ஏதேனும் உணவளிக்க வலியுறுத்தினார்.
மேலும், நாய்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளையும் எப்போதும் கைவசம் வைத்திக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT