Published : 29 Mar 2020 10:38 AM
Last Updated : 29 Mar 2020 10:38 AM
கரோனா அச்சத்தால், வானூர் அருகே அம்மணங்குப்பம் கிராமத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிரில் களையெடுக்கும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தங்கள் முகத்தைத் துண்டு, சேலைத் தலைப்பால் மூடிக்கொண்டு தங்கள் பணியினைச் செய்தனர்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் குறிப்பிட்ட கால இடைவெளியில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காய்கறிகள், பால் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
எந்தத் துறைக்கு விடுமுறை அளித்தாலும், மனிதன் உயிர் வாழத் தேவையான உணவு உற்பத்திக்கு விடுமுறை அளிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.
அந்தவகையில் வானூர் அருகே அம்மணங்குப்பம் கிராமத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிரில் களையெடுக்கும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தங்கள் முகத்தைத் துண்டு, சேலைத் தலைப்பால் மூடிக்கொண்டு தங்கள் பணியினைச் செய்தனர். கரோனா வைரஸ் வெயிலில் பரவாது என்பதை நம்பி நாட்டு மக்களுக்கான உணவை உற்பத்தி செய்யும்பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் கூறுகையில், ''3 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டுள்ளேன். தற்போது 2-வது களையெடுக்கும் தருணம். பருவத்தே பயிர் செய் என்பார்கள். அதனால் இப்பணிகளை அந்தந்த நேரத்திற்குச் செய்தாகவேண்டும். அந்த வகையில் இடைவெளி விட்டு விவசாயப்பணிகளை பெண்கள் செய்து வருகின்றனர்.
களை பறிப்பிற்குப் பின்பு இடவேண்டிய உரங்கள் வாங்கக் கடைகள் திறக்கப்படாமல் உள்ளன. இதற்கு மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கிராமத்தினர் தங்களுக்குத் தேவையான உரங்களை புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் வாங்குவோம். அங்கும் கடைகள் திறக்கப்படவில்லை. புதுச்சேரி அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னையில் ஊடுபயிராகப் பயிரிட்டுள்ள மணிலா அறுவடை தருணம் அதற்கு கூலி ஆட்கள் கிடைக்காமல் மணிலா முளைக்கும் நிலையில் உள்ளது. இதற்கு நஷ்ட ஈடு வழங்கவோ அல்லது இழப்பீட்டுத் தொகை பெற காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு பரிந்துரை செய்ய வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT