Published : 29 Mar 2020 07:34 AM
Last Updated : 29 Mar 2020 07:34 AM

அமைச்சர், சட்டப்பேரவை துணைத் தலைவர், அதிமுக எம்எல்ஏ-க்கள் சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி

தமிழக முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு, தங்களது சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 கோடியை கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கோவை மாவட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்.

கோவை

கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ-க்கள் சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவையில் நேற்று நடைபெற்றது. இதில், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் கு.ராசமணி மற்றும் எம்எல்ஏ-க்கள், அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பு கவசங்கள், முகக் கவசங்கள், ரப்பர் கையுறை, கிருமிநாசினி என மொத்தம் ரூ.22.79 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை தூய்மைப் பணியாளர்களுக்கு அமைச்சர் வழங்கினார்.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், எம்எல்ஏ-க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, அம்மன் கே.அர்ச்சுனன், எட்டிமடை எ.சண்முகம், கஸ்தூரி வாசு, வி.பி.கந்தசாமி ஆகியோரது, சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மொத்தம் ரூ.5 கோடி நிதி வழங்குவதற்கான ஆணையை, மாவட்ட ஆட்சியரிடம் அமைச்சர் வழங்கினார்.

மேலும், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, கோவை தேவி சில்க்ஸ் நிறுவனர் சிவக்குமார் ரூ.1 கோடி, சூலூர் காட்டம்பட்டியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவக்குமார் ரூ.20 லட்சம் நிதியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கினர்.

வதந்தி பரப்பினால் நடவடிக்கை

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் கிடைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உறுதிப்படுத்தப்படாத தகவல் களை மக்கள் நம்ப வேண்டாம். அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x