Published : 29 Mar 2020 07:25 AM
Last Updated : 29 Mar 2020 07:25 AM

கரோனா தனிமைப்படுத்தும் முகாமுக்கு பயன்படுத்த 6,000 சதுர அடி வீட்டை அளிக்கும் தொழிலதிபர்

கரோனா தனிமைப்படுத்தும் முகாமாக பயன்படுத்த அனுமதி அளிக்கப் பட்டுள்ள வீடு.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையில் கரோனா வைரஸ் பரவலில் தனிமைப்படுத்தப்படுவோருக்கு, சுமார் 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள வீட்டை முகாமாக பயன்படுத்திக்கொள்ள தொழிலதிபர் தென்னரசு சாம்ராஜ் அனுமதி அளித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள 715 பேர், வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ள 158 பேர் என மொத்தம் 873 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜோலார்பேட்டை தொழிலதிபரும் அமமுக நகரச் செயலாளருமான தென்னரசு சாம்ராஜ், தனது வீட்டை கரோனா தனிமைப்படுத்தும் முகாமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளார். 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவுஉள்ள இந்த வீட்டில், 50-க்கும் மேற்பட்டோரை தங்கவைக்க படுக்கை வசதி களை செய்துகொள்ள முடியும். இதுதொடர்பாக திருப்பத்தூர் அரசு மருத் துவமனை மருத்துவர்களிடம் அவர் முறையான தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த வீட்டில் இருந்து குடும்பத்துடன் வேறொரு வீட்டுக்கு இடம்பெயர்ந்துள்ள தென்னரசு சாம்ராஜ் இதுகுறித்து கூறும் போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தும் நபர்களுக்கான முகாம் அமைக்க கட்டிடங்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாக கேள்விப்பட்டேன். இதனால், எனது வீட்டை முகாமாக பயன்படுத்திக்கொள்ள எல்லா ஏற்பாடு களையும் செய்துள்ளேன். தேவைப்பட்டால் வேறு மாற்றங்களையும் செய்துதர தயாராக உள்ளேன். அவர்களும் தேவை ஏற்படும் நேரத்தில் எனது வீட்டை பயன்படுத்திக்கொள்வதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

தனியார் பால் பாக்கெட் வியாபாரம் பிரதான தொழிலாக இருப்பதால், இந்த ஊரடங்கு நேரத்தில் உதவும் உள்ளங்கள் மூலமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனை நோயாளிகள் மற்றும் நகரில் உள்ள ஆதரவற்றோருக்கு தினமும் 200 லிட்டர் அளவுக்கு காலையும் மாலையும் இலவசமாக பால் விநியோகம் செய்து வருகிறேன்’’ என்று தெரிவித்தார்.

தென்னரசு சாம்ராஜின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பு மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x