Published : 29 Mar 2020 07:20 AM
Last Updated : 29 Mar 2020 07:20 AM

கையெடுத்து கும்பிட்டு வாங்கிட்டு போறாங்க!- நாளிதழ் முகவர் சொல்லும் செய்தி

கரோனா பீதியால் நாட்டின் 130 கோடி மக்களும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில், அதிகாலை 4 மணிக்கே கிளம்பி நம் வீடுதேடி வந்து நாளிதழ் போடுகிறார்கள் பத்திரிகை முகவர்களும், விநியோகிப்பவர்களும்.

அவர்களது இன்றைய மனநிலை எப்படி இருக்கிறது?

கோவை ஆர்.எஸ்.புரம் முகவர் கே.செல்வம் கூறியதாவது:

1984-ல் இந்த தொழிலுக்கு வந்தேனுங்க. 36 வருஷ சர்வீஸ்ல இப்பப்படுற மாதிரி கஷ்டத்தை என் வாழ்க்கையிலேயே பட்டதில்லீங்க. அவ்வளவு நெருக்கடியிலும் நாங்க பேப்பர் போடுறதுக்கு காரணம், வாசகர்களின் ஆர்வம்தான். ‘‘சார், எப்படியாவது வீட்டுக்கு பேப்பர் போட்ருங்க சார். வாட்ஸ்அப்ல வர்றதகவல் எல்லாம் பீதியை உண்டுபண்ணுறதா இருக்கு. பேப்பர்லதான் உண்மையான செய்தியைப் படிக்கமுடியும். ‘இந்து தமிழ்’ பேப்பர் இருந்தா, மணிக்கணக்குல படிக்கலாம்’’ என்று போன் போட்டுச் சொல்கிறார்கள்.

அதேமாதிரி, வழக்கமா கடையில மட்டுமே பேப்பர் வாங்குறவங்க, இன்னைக்காவது திறந்திருக்குதா என்று தினமும் வந்து வந்து பார்க்குறாங்க. அவங்களுக்காக இப்ப நாங்களே அந்தந்த கடை வாசலில் ஒரு பையனை உட்கார வெச்சி பேப்பர் விற்கிறோம்.

பேப்பரை கையில வாங்குனதும் கடவுளைக் கண்டதுமாதிரி கையெடுத்துக் கும்பிட்டு வாங்கிட்டுப் போறாங்க. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுற பசங்க,வீடு தேடி வந்தே பேப்பர் வாங்குற அளவுக்கு ஆர்வமா இருக்காங்க. மளிகை கடை,பால் பூத்துக்கு அடுத்து மக்கள்அத்தியாவசியமானதா பத்திரிகை யைத்தான் நினைக்கிறாங்க.

மற்ற நாட்கள்ல எப்படியோ, இந்த நேரத்துல அவங்கள ஏமாத்திடக் கூடாதுன்னு நான் என் மனைவி, தம்பி, தம்பி மனைவின்னு குடும்பத்து ஆட்களே நேரடியா பிக்அப் பாயின்ட்டுக்கு போயி, பேப்பர்களை பிரிச்சுக்கொடுத்துக்கிட்டு இருக்கிறோம்ங்க என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x