Published : 28 Mar 2020 04:18 PM
Last Updated : 28 Mar 2020 04:18 PM
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து, இந்தக் கோரிக்கையை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
கரோனாவால் தமிழகம் சந்திக்கும் அசாதாரணமான சூழ்நிலையை அரசு மற்றும் ஆளுங்கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, இதுகுறித்து கலந்துரையாடல் நடத்துவதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டுமெனவும், ஒருவேளை கூட்டமாக நடத்த முடியாவிட்டால் வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ, பொதுச் செயலாளர், மதிமுக
"பொதுமக்கள் மனதில் அச்சத்தை, கவலையைப் போக்கி நம்பிக்கையை ஊட்ட வேண்டும். ஆளும் கட்சியும், அரசும் மட்டுமே இதைச் செய்துவிட முடியாது. கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளும் தோளோடு தோள் நின்று ஒன்றுபட்டு இந்தக் கரோனா தாக்குதலை எதிர்கொள்ள வேண்டும்.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சரியான யோசனையைச் சொல்லி இருக்கிறார்.
நெருக்கமாக அமராமல், தனித்தனியாக அமருகின்ற வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்து, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதல்வர் ஏற்பாடு செய்வது மிகவும் இன்றியமையாதது ஆகும்.
மாற்று ஏற்பாடாக வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தலாம்.
முதல்வர் இந்த அபாயகரமான சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனையை ஏற்றுச் செயல்படுவது ஒட்டுமொத்தப் பொதுமக்களும் அச்சத்திலிருந்து விடுபடும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.
இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய நேரத்தில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை ஒன்று திரட்டுவது அரசின் உடனடிக் கடமையாகும். இதனை நிறைவேற்றும் முறையில் தமிழ்நாடு அரசு அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டி, கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையை ஒருங்கிணைத்து மேலும் தீவிரமாக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT