Published : 28 Mar 2020 03:58 PM
Last Updated : 28 Mar 2020 03:58 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பியவர்களாக இதுவரை 1621 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பான ஓட்டல் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், விற்பனைக் கடைகளுக்கு பொருட்கள் கொண்டுசெல்ல வாகனங்களுக்குத் தேவையான அனுமதிச் சீட்டுகளை ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் வியாபார நிறுவனத்தினர், வணிகர்கள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பியவர்களாக இதுவரை 1621 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கி உதவ சப் கலெக்டர் தலைமையில் வருவாய் அதிகாரி உள்ளிட்டோர், ஊராட்சி பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கே சென்று உணவு மற்றும் மளிகைபொருள்களை டோர் டெலிவரி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் எடுத்து உள்ளது. இது தொடர்பான விவரங்கள் அறிவதற்கு தூத்துக்குடி இணையதள பக்கத்தில் ஏற்பாடு செய்யபட்டது.
தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி ஞாயிற்றுக்கிழமை முதல் பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பால், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை திறந்து இருப்பதற்கான நேர விதிமுறை கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.
தூத்துக்குடியில் கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 16 பேருக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கொரோனா இருப்பதன் அறிகுறி இல்லை. மேலும் 3 பேருக்கான ரத்த மாதிரி முடிவுகள் வர வேண்டியுள்ளது.
தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்காக 150 படுக்கைகள் கொண்ட தனி சிகிச்சை பிரிவு தயாராக உள்ளது. இது தவிர திருச்செந்தூர், கோவில்பட்டி, காயல்பட்டினம், விளாத்திகுளம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் தனி சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன” என்றார்.
முன்னதாக, தூத்துக்குடியில் காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து அவர், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT