Published : 28 Mar 2020 03:38 PM
Last Updated : 28 Mar 2020 03:38 PM
‘‘உங்கள் நேர்மறையான மனநிலை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதேவேளையில் எதிர்மறை எண்ணங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்’’ என்று உளவியல் நிபுணர் ஷர்மிளா பாலகுரு தெரிவித்தார்.
‘கரோனா’ அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள், வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் மக்கள் தற்போது மிகுந்த மன அழுத்ததிற்கு ஆளாகியுள்ளார்கள்.
சிறுசிறு உடல் உபாதை ஏற்பட்டால் கூட அது கரோனாவுக்கான அறிகுறியாக இருக்குமோ? நமக்கு வந்தால் நமது குடும்பம் என்னவாகும்? என்று இந்த நோய் வராமலேயே மிகுந்த மனப்பதட்டத்தில் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறார்கள்.
அதனால், அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாகவும், மன அழுத்தமும் அதிகரிப்பதாகவும் மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து உளவியல் நிபுணர் டாக்டர் ஷர்மிளா பாலகுரு கூறியதாவது:
‘கரோனா’வைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் நமக்கு ஏற்கெவே தெரியும். கரோனா வைரஸ் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதில் இருந்து உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இணையத்தில் கூடுதல் தகவல்களைத் தேடாதீர்கள். அது உங்கள் மனநிலையை பலவீனப்படுத்தும்.
‘கரோனா’ பற்றிய அபாயகரமான தகவல்களை மற்றவர்களுக்கு பரப்புவதைத் தவிர்க்கவும். உங்களைப் போன்ற மனவலிமை எல்லோருக்கும் இருக்காது.
சாதாரண இருமல் வந்தால் அந்த நோய் அறிகுறி இருக்குமோ என்று தேவையில்லாமல் அச்சமடைய வேண்டாம். அதற்காக உதாசீனப்படுத்தவும் வேண்டாம். மனது எதை நம்புகிறேதோ அதை நாம் பெரிய பிரச்சினையாக எடுத்துக் கொள்வோம்.
முடிந்தால் இனிமையான பாடல்களைக் கேட்கலாம். வீட்டில் இருந்து விளையாடக் கூடிய விருப்பமான நம்முடைய சிறு வயது விளையாட்டுகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களுடன் விளையாடலாம். புத்தகங்கள் வாசிக்கலாம். தியானம் செய்யலாம்.குழந்தைகளிடம் திருப்பி திருப்பி இந்த நோயை பற்றி பேசாமல் அவர்களிடம் அவர்களின் எதிர்கால திட்டம், அவர்கள் ஆசைகளைக் கேட்டு ஊக்கப்படுத்தலாம்.
தற்போது வீட்டில் இருப்பதற்கான அதிகமான நேரம் கிடைத்துள்ளது. இந்த நேரத்தை குடும்பத்தில் உள்ளவர்களுக்காக பயனுள்ளதாக மாற்றலாம். உங்கள் கைகளைக் கழுவுதல், வீட்டில் அனைவரையும் ஒரு அடையாளம் அல்லது அலாரம் வைத்து ஒழுக்கத்தைப் பேண வைக்கலாம். தனிமைப்படுத்துதல் மனவலிமையை பலவீனப்படுத்தும். இந்த நேரத்தில் உங்கள் நேர்மறையான மனநிலை உங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உங்கள் எதிர்மறை எண்ணங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். அதனால், இந்த ஒய்வு நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்ற மனநிலையை ஒதுக்கிவைத்துவிட்டு மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT